புதுச்சேரி, டிச. 12: புதுச்சேரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில், புதுச்சேரியில் இருந்து பெண் ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட செல்போனில் இருந்து மர்ம நபர் ஒருவர் பேசுவதாகவும், புதுவையில் வெடிகுண்டு வெடித்ததாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார். தமிழ்நாடு கட்டுப்பாட்டு அறையிலிருந்து புதுச்சேரி போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர் ஒருவர், மேற்கூறிய பெண்ணின் செல்போனை தவறுதலாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
