பெரம்பூர், டிச. 12: அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (53), ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் செங்கோடன் என்பவரது நிலத்தை விற்று கொடுத்துள்ளார். செங்கோடனின் மருமகள் பாரதி என்பவர் தனது சொத்தை தனக்கு தெரியாமல் விற்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும், பாரதி பிரச்னையை பிரபல ரவுடி நாகேந்திரனின் இரண்டாவது மகன் அஜித் ராஜ் மூலம் பஞ்சாயத்து பேச வேண்டும் என்று கூறி லோகநாதனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே வரச் சொல்லி தனது ஆட்களை வைத்து மிரட்டி லோகநாதனின் காரை பறித்து சென்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகநாதன் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், எம்கேபி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் பிரபல ரவுடி உயிரிழந்த நாகேந்திரனின் 2வது மகன் அஜித் ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது அவர் வேறு ஒரு வழக்கில் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் வியாசர்பாடி கென்னடி நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராகுல்(30) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்த நிலையில் அஜித்ராஜின் நண்பரான வியாசர்பாடி எம்கேபி நகர் 15வது பிரதான சாலையைச் சேர்ந்த பிரகாஷ் (34) என்பவரை நேற்று எம்கேபி நகர் போலீசார் கைது செய்தனர். இவர் வடசென்னை மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். சம்பவத்தன்று அஜித் ராஜ் கூறியதன்பேரில் லோகநாதனின் காரை பறித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் மனோஜ் குமார், கிஷோர், நிர்மல் குமார் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
