10.81 லட்சம் எஸ்ஐஆர் படிவம் கணினியில் பதிவேற்றம் மேலும் 3 நாட்களுக்கு காலநீடிப்பு வேலூர் மாவட்டத்தில்

வேலூர், டிச.12: வேலூர் மாவட்டத்தில் 10.81 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புபடி வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளும் பணிகள் கடந்த 28ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 13,03,030 வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கி வீடு வீடாக தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டது. வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யவும், பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தெளிவு பெறும் வகையில், மாவட்டத்தில் உள்ள 1,314 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் சில வாக்காளர்களுக்கு தங்களது 2002ம் ஆண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உள்ள வாக்காளரின் சட்டமன்ற தொகுதியின் பெயர், எண், பாகம் எண், வரிசை எண் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளவும், கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதில் உள்ள சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10.81 லட்சம் வாக்காளர்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில், மேலும் 3 நாட்களுக்கு காலநீடிப்பு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: