நடப்பாண்டு பருவ தேர்வில் 2021ம் ஆண்டு கேள்வித்தாளால் மாணவர்கள் அதிர்ச்சி பேராசிரியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் குளறுபடி

வேலூர், நவ.17: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் தற்போது நடைபெற்று வரும் பருவத்தேர்வில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான கேள்வித்தாளே வழங்கியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலையில் பருவத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதுநிலை கணிதவியல் மூன்றாம் பருவத் தேர்வில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான கேள்வித்தாள் அப்படியே மீண்டும் இந்தாண்டு வெளியாகியுள்ளது. 3 தேர்வுகளில் வெளியான பழைய கேள்விகளால் மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகளும் அதன் முடிவுகளும் சர்ச்சையாகி வருகிறது. தற்போது நடைபெறும் பருவத்தேர்வில் 2021ம் ஆண்டு வெளியான கேள்வித்தாளே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பழைய கேள்விகளையே மீண்டும் வழங்க எதற்காக கேள்வித்தாள் வடிவமைப்பு குழு அமைத்து அவர்களுக்கு பணம் வழங்க வேண்டும். பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை கட்டுப்பாடு இல்லாமல் இயங்கி வருகிறது. கேள்வித்தாள் வடிவமைப்பு குழுவிடம் பெறப்படும் கேள்வித்தாள்களை சரிபார்ப்பு குழு சரிவர கவனிக்கவில்லை. சரியாக கவனித்து இருந்தால் பழைய கேள்வித்தாள் ஏன் மீண்டும் வரப்போகிறது’ என்றனர். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம் கூறுகையில், ‘பழைய கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post நடப்பாண்டு பருவ தேர்வில் 2021ம் ஆண்டு கேள்வித்தாளால் மாணவர்கள் அதிர்ச்சி பேராசிரியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் குளறுபடி appeared first on Dinakaran.

Related Stories: