74 நிறுவனங்கள் ₹860.51 கோடி முதலீடு கலெக்டர் சுப்புலட்சுமி தகவல் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், ஜூலை 6: வேலூர் மாவட்டத்தில் 74 நிறுவனங்கள் ₹860.51 கோடி மதிப்பீட்டில் தொழில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்தார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் வேலூரில் நேற்று பிரபல தனியார் ஓட்டலில் நடந்தது. வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை கூடுதல் இயக்குனர் ரேஷ்மா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரமணி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: வேலூர் மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் மூலம் 74 நிறுவனங்கள் ₹860.51 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட 74 நிறுவனங்களில் 11 நிறுவனங்கள் ₹125.32 கோடியில் தொழில்களை தொடங்கி 294 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர். மேலும் இயந்திர தளவாடங்கள் கொள்முதல் செய்து 7 நிறுவனங்கள் ₹44.14 கோடியில் தொழில் நிறுவனங்களை தொடங்க உள்ளனர். 10 நிறுவனங்கள் ₹139.85 கோடியில் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளன. மேலும் 2 நிறுவனங்கள் நிலம் தேர்வு செய்து, அவர்கள் ₹140.25 கோடியில் தொழில்நிறுவனங்களை தொடங்க உள்ளனர்.

20 நிறுவனங்கள் ₹170.57 மதிப்பீட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான நிலம் வாங்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் 24 நிறுவனங்கள் ₹227.49 கோடியில் முதலீடு செய்ய உள்ளனர். தொழில் நிறுவனங்கள் தொடங்க, நடத்த தேவையான ஒப்புதல்கள், தடையில்லா சான்று, துறைசார்ந்த அனுமதி, புதுப்பித்தல் தொழில் உரிமம் ஆகியவற்றை எளிதாக பெற ஒரு ஒற்றைசாளர இணையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட கால வரம்புக்குள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல்கள் வழங்கப்படும். இவற்றை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு மாதந்தோறும் கூடி, ஒப்புதல்களை வழங்கும்.
எனவே, தொழில் தொடங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் என்னென்ன செய்ய வேண்டுமோ? எந்தெந்த வகையிலான ஒத்துழைப்பு தேவைப்படுமோ? அத்தனையும் வழங்கும். எனவே, முதலீட்டாளர்கள் விரைந்து தொழில் தொடங்கி அதிகளவிலான வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். இங்கு பிற மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர் தெரிவித்த கருத்துக்கள் அந்தந்த கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 74 நிறுவனங்கள் ₹860.51 கோடி முதலீடு கலெக்டர் சுப்புலட்சுமி தகவல் வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: