ஒடுகத்தூர், ஜூன் 29: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் விலை கிடு கிடுவென உயர்ந்து நேற்று ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. இதனால், ஒரு ஜோடி ஆட்டின் விலை ₹40 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு, உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனாலேயே, ஒடுகத்தூர் ஆட்டுச்சந்தைக்கு தனி மவுசு உண்டு. இதனால், வாரந்தோறும் ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. அதே வேளையில் திருவிழா, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட நாட்களில் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடப்பதும், புரட்டாசி மாதங்களில் சில லட்சங்களுக்கு மட்டுமே விற்பனை நடப்பதும் வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை ஆட்டு சந்தை கூடியது. கடந்த வாரம் ஆடுகளின் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால், சொற்ப எண்ணிக்கையிலையே ஆடுகள் கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர் சந்தையில் ஆடுகளின் வரத்து கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் நேர்த்திக்கடனுக்காகவும், வேண்டுதலுக்காகவும் ஆடுகளை வாங்க காலை 6 மணி முதலே சந்தையில் கூட்டம் கலை கட்டியது. இதன் காரணமாக வியாரிகளும் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை விற்பனை செய்வதில் மும்முரமாக இருந்தனர். எப்போதுமே, சந்தைக்கு வெள்ளாடுகள் மட்டும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.ஆனால், நேற்று செம்மறி ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. இதனால், ஒரு ஆட்டின் விலை முன்பைவிட கிடு கிடுவென உயர்ந்து ₹20 ஆயிரத்துக்கும், ஒரு ஜோடி ஆட்டின் விலை ₹40 முதல் ₹45 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், ‘பக்ரீத் பண்டிகை முடிந்ததும் கடந்த வாரம் ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும், கால்நடைகளுக்கு நோய் தொற்று இருப்பதாக பரவிய வதந்தியின் காரணமாக ஆடுகள் குறைந்த எண்ணிக்கையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஆடுகளின் வரத்து நேற்று அதிகரித்து உள்ளது. இதனால் வியாபாரிகளும் ஆடுகளை விற்று நல்ல லாபம் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அதன்படி, நேற்று ஒரே நாளில் சுமார் ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது என கூறினர்.
The post ஆடுகளின் விலை உயர்ந்து ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் வாரச்சந்தையில் appeared first on Dinakaran.