₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்

வேலூர், ஜூலை 2: பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம் நடத்தப்பட்டுள்ள நிலையில், ₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி வைத்துள்ளதாக செல்போன் மெசேஜில் வந்த தகவலால் அதிர்ச்சியடைந்த வாலிபர் நடவடிக்கை கோரிக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த முகமது நயிமுதீன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் டிப்ளமோ முடித்துள்ளேன். தற்போது வேலை தேடி வருகிறேன். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் என்னுடயை செல்போனுக்கு ஒரு ‘குறுஞ்செய்தி’ வந்தது. அதில் 2023-2024ம் ஆண்டிற்கான ‘வருமான வரி’ தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் விவரம் எனக்கு புரியாததால், அந்த குறுஞ்செய்தியை நண்பனுக்கு அனுப்பி விசாரித்தேன். பின்னர் என்னுடைய பான் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, ‘என்.எம்.எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனம் நெம்பர் 5/135 சேரன் காலனி ரோடு, துடியலூர், கோவை-641034 என்ற முகவரியில் இயங்கி வருவதும், அதற்கான ஜிஎஸ்டி எண், என்னுடைய பெயரில் துடியலூர் சர்கிள் கோவை மண்டலம்-2 கோவை டிவிசனிலிருந்து பெறப்பட்டது தெரியவந்தது.

பின்னர், நண்பரின் உதவியோடு ஜிஎஸ்டி போர்டலில் ஆய்வு செய்தபோது, என் பெயரில் போலியாக நிறுவனம் நடத்தி, லட்ச கணக்கில் பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது. கோவையில் உள்ள முகவரியில் விசாரித்தபோது, அங்கு எந்த நிறுவனமும் செயல்படவில்லை என்றும் போலியாக ஜிஎஸ்டி என் பெயரில் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. கடந்த மாதம் வரை எனக்கு ஜிஎஸ்டி வரியாக ₹3.50 கோடி கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இதுகுறித்து, வேலூரில் உள்ள ஜிஎஸ்டி அதிகாரிகளை தொடர்பு கொண்டு என் பெயரில் போலியாக பெறப்பட்டுள்ள ஜிஎஸ்டி எண்ணை ரத்து செய்ய கேட்டபோது, முறையாக புகார் கொடுத்து, காவல் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம் appeared first on Dinakaran.

Related Stories: