ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை காவலாளிக்கு 5 ஆண்டு சிறை வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில்

வேலூர், ஜூலை 4: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த சென்னை காவலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல்(68). இவர் பெங்களூரு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சாமுவேல் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி பெங்களூரு-சென்னை மெயில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் சென்னைக்கு பயணம் செய்தார். அதே பெட்டியில் 9 வயது சிறுமி தாயுடன் பயணித்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த சிறிதுநேரத்தில் சாமுவேல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இதுகுறித்து தாயாரிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக ரயில்வே போலீஸ் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் காட்பாடி ரயில் நிலையத்தில் சாமுவேலை கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சாமுவேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தியா வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமுவேலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சாமுவேலை போலீசார் பலத்த காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

The post ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை காவலாளிக்கு 5 ஆண்டு சிறை வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் appeared first on Dinakaran.

Related Stories: