₹7.2 கோடி மதிப்பில் சுரங்க நடைபாதை அமைக்க அளவீடு செய்யும் பணி தொடக்கம் அடுத்த வாரத்தில் பணிகள் தொடங்க முடிவு போக்குவரத்து நெரிசலை குறைக்க வேலூர் கிரீன் சர்க்கிள் சுற்றளவை குறைத்து

வேலூர், ஜூன் 28: போக்குவரத்து நெரிசலை குறைக்க வேலூர் கிரீன் சர்க்கிளில் சுற்றளவை குறைத்து, ₹7.2 கோடி மதிப்பில் சுரங்க நடைபாதை அமைக்க அளவீடு செய்யும் பணி தொடங்கியது. அடுத்த வாரத்தில் பணிகள் தொடங்க உள்ளனர். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், விழுப்புரம்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடமாக வேலூர் கிரீன் சர்க்கிள் உள்ளது. அதோடு இதன் அருகில் வேலூர் புதிய பஸ் நிலையமும், அதை சார்ந்து பெரும் வர்த்தக வளாகங்களும் அமைந்துள்ளன. நகரின் மத்தியில் அமைந்துள்ள கிரீன் சர்க்கிளில் மேற்கண்ட காரணங்களால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அதோடு விபத்துகளும் அதிகளவில் நடைபெறும் மையமாக கிரீன் சர்க்கிள் மாறிப்போனது. இத்தகைய காரணங்களால் கிரீன் சர்க்கிளில் சர்வீஸ் சாலைகளின் அகலத்தை அதிகப்படுத்த வேண்டும், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ₹7.2 கோடி செலவில் சர்வீஸ் சாலை அகலப்படுத்துதல், மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணிகளுடன் சுரங்க நடைபாதை அமைப்பதற்கான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுரங்க நடைபாதையை பொறுத்த வரை 100 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும் கொண்டதாக, அதிக வெளிச்சம் உமிழும் விளக்குகளுடன், சிசிடிவி கேமராக்களுடன் அமைகிறது. இப்பணியை 6 மாதங்களில் முடித்து விட திட்டமிடப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போது சுரங்க நடைபாதைக்கு முன்னதாக மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு மற்றும் சர்வீஸ் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் சுரங்க நடைப்பாதை அமைய உள்ள பகுதி மற்றும் கிரீன் சர்க்கிள் சுற்றளவை குறைத்து சாலையை அகலப்படுத்துவற்கான அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் இணைந்து எல் எண்ட் டி நிறுவனமும் மேற்கொண்டு வருகிறது. இந்த அளவீடு பணி இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து பணிகள் தொடங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் மொத்தம் ₹7.20 கோடி மதிப்பீட்டில் சுரங்க நடைபாதை அமைக்கப்படுகிறது. முன்னதாக தனியார் மருத்துவமனை பகுதியில் இருந்து கிரீன் சர்க்கிள் ஆரம்பம் வரை சர்வீஸ் சாலையை அகலப்படுத்தும் பணியும், மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணிகளும் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து சுரங்க நடைபாதை ஜிஆர்டி ஹோட்டல் அருகில் இருந்து கிரீன் சர்க்கிள் குறுக்காக சென்று ஜிஆர்டி ஜூவல்லரி வரை இருபுறமும் கடந்து செல்லும் வகையில் இருக்கும். இதற்கான அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அடுத்த வாரம் சுரங்க நடைபாதை அமைக்கும் பணி தொடங்கும். மேலும் கிரின் சர்க்களில் சுற்றளவு குறைக்கப்படும். அதாவது 15 மீட்டர் வரையும் சாலை அகலப்படுத்தப்படும். சென்னையில் இருந்து வேலூர் நகரத்துக்கு வரும் வாகனங்கள் செல்ல தனி வழியும், அதேபோல் புதிய பஸ்நிலையம் செல்லவதற்கு தனிவழியாக அமைக்கப்படும். இப்பணி தொடங்கிய அடுத்த 6 மாதங்களில் முடிக்க ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ₹7.2 கோடி மதிப்பில் சுரங்க நடைபாதை அமைக்க அளவீடு செய்யும் பணி தொடக்கம் அடுத்த வாரத்தில் பணிகள் தொடங்க முடிவு போக்குவரத்து நெரிசலை குறைக்க வேலூர் கிரீன் சர்க்கிள் சுற்றளவை குறைத்து appeared first on Dinakaran.

Related Stories: