ஒடுகத்தூர், ஜூன் 29: ஒடுகத்தூர் அருகே தொங்குமலை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கோலாகலமாக நடந்த மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவில் 3 ஆயிரம் பேர் திரண்டனர். இதில் 100 ஆடுகள் பலியிடப்பட்டு வீடுதோறும் கறி விருந்து பரிமாறப்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல தலைமுறைகளை கடந்து பாரம்பரியமாக காளியம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு வெட்டவெளியில் ஜலாமரம் என்ற மரம் வைத்து வழிபடப்படுகிறது.அதன்படி, இந்தாண்டு தொங்குமலை கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழா மற்றும் எருகட்டும் நிகழ்ச்சிக்காக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அப்பகுதி மக்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
தொடர்ந்து நேற்று காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதற்காக, மலைவாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி ஊர் சீதனம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மேலும், நேர்த்திக்கடனுக்காக சுமார் 100 ஆடுகளை பலியிட்டு காளியம்மனை வழிபட்டனர். தொடந்து, மலைவாழ் மக்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த ‘ஜாலாமரம்’ என்றழைக்கப்படும் மரம், முன்னோர்கள் வைத்து வழிபட்டு வந்த கயிறு, மரக்கட்டையாலான கத்திகள், மேளம் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின்னர், எருதுகட்டும் நிகழ்ச்சிக்காக பெரிய மைதானத்தில் மூங்கில்களால் அமைக்கப்பட்ட கொட்டகைகளுக்கு வாழை, வண்ண மலர்கள், பலா, மாம்பழம் உள்ளிட்டவற்றை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த 6 கொட்டகைகளில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 150க்கும் மேற்பட்ட மாடுகளை அடைத்து வைத்தனர். பின்னர், மதியம் ஒரு மணியளவில் ஒவ்வொரு கொட்டகையில் இருந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகளை ஒவ்வொன்றாக கயிறு கட்டி அவிழ்த்து விட்டனர். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காளைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த விழாவினை காண பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டி, தேந்தூர், பெரியபணப்பாறை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வீடுகளில் கறி விருந்து பரிமாறப்பட்டது. விழாவில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
The post மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவில் 3 ஆயிரம் பேர் திரண்டனர் 100 ஆடுகளை பலியிட்டு வீடுதோறும் கறி விருந்து தொங்குமலை காளியம்மன் கோயிலில் கோலாகலம் appeared first on Dinakaran.