பிரபல நிதி நிறுவனங்களின் பெயரில் வீடு வீடாக சென்று கும்பல் மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக

வேலூர், ஜூைல 4: வேலூரில் பிரபல நிதி நிறுவனங்களின் பெயரில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக வீடு வீடாக சென்று மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரபல நிதி நிறுவனங்களின் டீம் லீடர் என்ற பொறுப்புடன் தனது பெயர், மொபைல் எண்ணுடன், நிறுவனத்தின் போலி முகவரியுடன் கூடிய விசிட்டிங் கார்டு அச்சடித்து அதன் மூலம் ஒவ்வொரு வீடாக சென்று, தங்கள் நிறுவனம் குறைந்த வட்டியில் கடனுதவி செய்வதாக அணுகுகின்றனர். குறிப்பாக இவர்கள் நடுத்தர வர்க்கத்தினரை மட்டுமே குறி வைத்து அணுகுகின்றனர்.

அவர்களிடம், ‘எங்கள் நிறுவனம் குறைந்த வட்டியில் ₹3.50 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதனை சுலப தவணைகளாக செலுத்தலாம். அதற்கு நீங்கள் உங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காப்பிகளை தர வேண்டும். மேலும் முன்பணமும் செலுத்த வேண்டும்’ என்று கூறுகின்றனர். முன்பணம் என்பது கடன் தொகைக்கு ஏற்ப ₹2 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை பெற்றுக் கொள்கின்றனர். இந்த நடைமுறையை பின்பற்றி வேலூர் மாவட்டத்தில் பரவலாக வசூல் செய்து கடன் வழங்காமல் டிமிக்கி கொடுத்துள்ளனர். இதனால் தங்களிடம் வழங்கப்பட்ட விசிட்டிங் கார்டில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது அது தவறான எண் என்பதும், நிதி நிறுவன முகவரி போலியானது என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனங்களின் உண்மையான முகவரியை தேடி சென்றபோதுதான், அப்படி டீன் லீடர் என்ற பொறுப்பில் யாரையும் அந்நிறுவனங்கள் வைத்துக் கொள்வதில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து வருகின்றனர். அதேபோல் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் வசூலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை கோரியும் காட்பாடியை சேர்ந்த நிதி நிறுவனமும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, ‘பிரபல நிதி நிறுவனங்களின் பிரதிநிதி என்ற பெயரில் நடுத்தர வர்க்கத்தினரை மட்டும் குறி வைத்து ₹2 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை வசூல் செய்யும் நூதன மோசடி நடந்து வருகிறது. இதுபோன்ற கும்பல்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக, அவர்கள் கூறும் நிதி நிறுவனம் குறித்த உண்மை தகவல்களை கண்டறிய வேண்டும்’ என்றனர்.

The post பிரபல நிதி நிறுவனங்களின் பெயரில் வீடு வீடாக சென்று கும்பல் மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக appeared first on Dinakaran.

Related Stories: