எதை திருடினாலும் தாக்கரே பெயரை திருட முடியாது தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே ஆவேச பேச்சு

மும்பை: கட்சி பெயர், சின்னம் ஆகியவற்றை திருடினாலும் தாக்கரே பெயரை திருட முடியாது. தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே ஆவேசமாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில் பிளவு பட்டு இருந்த சிவசேனாவில் கட்சி பெயர் மற்றும் சின்னம் ஆகியவை முதல்வர் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சிவசேனாவை நிறுவிய பால்தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் நேற்று மூத்த நிர்வாகிகள் சஞ்சய் ராவுத், சுபாஷ் தேசாய், அனில் தேசாய், அனில் பராப் உள்ளிட்டோருடன் உத்தவ் தாக்கரே சிவசேனா பவனில் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் உத்தவ் தாக்கரே கூறியதாவது: எங்கள் கட்சியின் பெயர் (சிவசேனா), சின்னம் (வில் மற்றும் அம்பு) திருடப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தவறானது. உச்ச நீதிமன்றம் தான் எங்களின் கடைசி நம்பிக்கை.

தேர்தல் ஆணையத்தால் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒரு பிரிவினருக்கு நேரடியாக வழங்கப்பட்ட ஒரு நிகழ்வு கூட இதற்கு முன்பு நடந்தது இல்லை. இந்த முடிவை தேர்தல் ஆணையம் அவசரமாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன?.  நடுநிலை தவறி நடந்த தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவத்துடன் அதை தேர்வு செய்ய வேண்டும்.

எங்கள் கட்சி பெயரையும் சின்னத்தையும் அவர்கள் எடுத்தாலும், எங்கள் தாக்கரே பெயரை அவர்களால் திருட முடியாது. பாலாசாகேப் தாக்ரேவின் குடும்பத்தில் பிறந்த நான் அதிர்ஷ்டசாலி. சிவசேனா கட்சி நிதி எங்கள் வங்கி கணக்குக்கிற்கு மாற்றுவதை பற்றி  பேச தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை. எனது தந்தையின் (மறைந்த பாலாசாகேப் தாக்ரே) பெயரையும், அவரது புகைப்படத்தையும் பயன்படுத்துவதை நிறுத்த அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?. வேண்டுமானால் அவர்களது(ஷிண்டே) தந்தையின் புகைப்படத்தை வைத்துவிட்டு வாக்கு கேட்கட்டும். இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.

* மகாராஷ்டிராவின் எதிரி அமித்ஷா

சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் நேற்று எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையம் சிவசேனாவின் முழுப் பிரச்னையையும் சொத்து பேரம் போலக் கருதி, தாக்ரேவால் வளர்க்கப்பட்ட சிவசேனாவை டெல்லியின் அடி வருடிகளிடம் ஒப்படைத்து விட்டது.  அமித்ஷா  ஆதரவின் காரணமாக சிவசேனாவின் ‘வில் அம்பு’ சின்னம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதையும் இனி மறைக்க வேண்டியதில்லை. இந்த நபர் மகாராஷ்டிரா மற்றும் மராத்தி மக்களின் எதிரி. அமித்ஷாவுடன் கூட்டணி வைப்பவர்கள் மகாராஷ்டிராவின் எதிரிகளாக பார்க்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘சிவசேனா கட்சி மற்றும் அதன் சின்னமான வில் அம்பு ஆகியவற்றை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கீடு செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் எங்களது தரப்பில் எந்தவொரு காரணத்தையோ அல்லது வாதங்களையோ கேட்காமல் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் தேர்தல் ஆணையத்தின் தரப்பின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்தார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘முறையான ஆவணங்களை சமர்ப்பித்து நாளை(இன்று) மீண்டும் முறையிடுங்கள்’’ என உத்தரவிட்டார்.

Related Stories: