ஆந்திர மாஜி அமைச்சர் கொலையில் ஜெகன்மோகனுக்கு தொடர்பில்லை; சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு

 

திருமலை: ஆந்திர முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொடர்பில்லை என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர்ரெட்டியின் தம்பியும், முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி கடந்த 2019ம் ஆண்டு கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த கொலைக்கு அரசியல் ரீதியாக லாபம் அடைய முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், கொலை செய்ததாக விவேகானந்தரெட்டியின் மகள் சுனிதா குற்றம் சாட்டி இருந்தார்.

இக்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: விவேகானந்த ரெட்டிக்கும், ஜெகன்மோகனுக்கும், இடையே தகராறு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. சுனிதாவின் சார்பிலும் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கவில்லை. விவேகானந்த ரெட்டி கொலை குறித்து ஜெகன்மோகனுக்கு உறவினர் என்ற முறையில் தெரிவிப்பது இயற்கையானது. விவேகானந்தரெட்டி கொலை தொடர்பான குற்றப்பத்திரிகையில் ஜெகன்மோகன் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

கொலை நடந்த அன்று காலையில் ஜெகன்மோகனுக்கு வந்த தொலைபேசி அழைப்பு குறித்து மேலும் விசாரிக்க தேவையில்லை. எனவே விவேகானந்தாரெட்டி கொலை வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விவேகானந்த ரெட்டியின் கொலை வழக்கில் ஜெகன்மோகனின் மற்றொரு சித்தப்பா பாஸ்கரரெட்டி, அவரது மகனும் கடப்பா எம்.பி.யுமான அவினாஷ்ரெட்டி உள்ளிட்டோர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: