மாநிலங்களவையிலும் அணுசக்தி மசோதா நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் அணுசக்தி மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அணுசக்தி துறையிலும் தனியார்கள் கால் பதிக்க உள்ளன. அணுமின் நிலையங்களில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், ‘இந்தியாவின் மாற்றத்திற்கான நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றம் மேம்பாடு (சாந்தி)’ மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், ‘‘பிரான்சில் அனைத்து அணு உலைகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இது என்பிசிஐஎல்-இன் திறனை விட 7 மடங்கு அதிகம். எனவே, அதிக அணுசக்தி நிலையங்களை அமைக்க என்பிசிஐஎல்-ஐ ஊக்குவிக்கலாம். அமெரிக்கா, வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் போன்ற பல நிர்ப்பந்தங்கள் அரசுக்கு இருக்கலாம். ஆனால் நிர்ப்பந்தத்தின் காரணமாக இப்படிப்பட்ட மசோதாவை அறிமுகப்படுத்தக்கூடாது.

நாம் நமது பொதுத்துறையைப் புறக்கணித்து, தனியார் துறையை ஊக்குவித்தால், அது தேசத்தின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. தனியார் முதலீடு வர வேண்டும். ஆனால் அது வளர்ச்சியின் இயந்திரமாக இருக்க கூடாது. நீங்கள் 3 வேளாண் மசோதாக்களைக் கொண்டுவந்தீர்கள், அவற்றை திரும்பப் பெற வேண்டியிருந்தது. இந்த மசோதாவிற்கு அந்த நிலை ஏற்படக்கூடாது’’ என்றார்.

இதே போல கதிர்வீச்சு அபாயம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘‘நடைமுறையில் உள்ள பாதுகாப்பு வழிமுறைகளில் எந்த சமரசமும் செய்யப்படாது. கதிர்வீச்சு தொடர்பான எந்தவிதமான ஆபத்துகள் குறித்த அறிக்கைகளும் வரவில்லை’’ என்றார். இதைத் தொடர்ந்து இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் நீக்க மசோதா காலக்கெடு நீட்டிப்பு
தொடர்ச்சியாக 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வில் உள்ளது. இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரி மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்தது. அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், கூட்டுக்குழு அறிக்கை சமர்பிப்பதற்கான அவகாசம் 2026 பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் முதல் வாரத்தில் நிறைவு பெறும்.

Related Stories: