புதுடெல்லி: பீகார் முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் , நஸ்ரத் பர்வீன் என்ற பெண் டாக்டருக்கு பணி நியமன கடிதம் வழங்கும் போது அவரது ஹிஜாபை அகற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பலதரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால் தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று நிதிஷ்குமார் கூறினார். இந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் வேலைக்கான நியமன கடிதம் பெற்ற நஸ்ரத் பர்வீன் பணியில் சேர மறுத்து விட்டார். அவர் மேற்கு வங்கத்திற்கு செல்லவிருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது முஸ்லிம் இளம் பெண்ணின் ஹிஜாப்பை நிதிஷ் அகற்றியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கிரிராஜ்,நீங்கள் பாஸ்போர்ட் எடுக்க சென்றால் உங்கள் முகத்தை காட்ட மாட்டீர்களா? விமான நிலையத்திற்கு சென்றால் உங்கள் முகத்தை காட்ட மாட்டீர்களா?மக்கள் பாகிஸ்தான், இங்கிலீஷ்தான் என பேசுகின்றனர். இது இந்தியா, இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்றார். அந்த பெண் வேலை நியமனத்தை பெற மறுத்து விட்டார் என்று தகவல் வந்துள்ளது பற்றி கேட்ட போது, அவர் அரசு வேலையை ஏற்பது அல்லது நரகத்திற்கு செல்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றார்.
