தெருநாய் கடி வழக்கு 3 நீதிபதி அமர்வில் ஜன.7ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை இணக்க அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தெரு நாய்கள் ஆர்வலர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்,‘‘தெரு நாய்கள் விவகாரத்தில் டெல்லி மாநகராட்சியின் நடவடிக்கையில் மனிதத்தன்மை துளி கூட இல்லை என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை ஜனவரி 7ம் தேதி மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். அன்றைய தினம் நாங்கள் சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப திட்டம் வைத்துள்ளோம். அதற்குப் பிறகு எது மனிதத் தன்மை இல்லாமல் இருக்கிறது என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று கூறினர். அப்போது மீண்டும் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்,‘‘டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை முழுமையாக அப்புறப்படுத்தி வருகிறார்கள். அவை காப்பகங்களில் அடைக்கப்படவும் இல்லை. வெறுமென அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’’ என கூறினார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘அதிகாரிகள் அவர்கள் செய்வதை செய்யட்டும். நாங்கள் விசாரணை நடத்தி உத்தரவிடுகிறோம் என்று தெரிவித் தனர்.

Related Stories: