100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி திட்டம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; நகலை கிழித்து சபாநாயகர் மீது வீச்சு; நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட விபி ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேறியது. எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதா நகலை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசி எறிந்தனர். அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு திட்டத்தை உறுதி செய்யும் வகையில் 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மாற்றாக விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத்திற்கான உத்தரவாத (கிராமப்புற) (விபி-ஜி ராம் ஜி) மசோதா மோடி அரசால் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இதில் 100 நாட்களுக்கு பதில் 125 நாள் வேலை வழங்கப்படும், விபி-ஜி ராம் ஜி சட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள், மாநிலங்கள் புதிய சட்டத்தின் விதிகளுக்கு இணங்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த புதிய மசோதா அடிப்படையில் 60:40 சதவீத அடிப்படையில் ஒன்றிய, மாநில அரசுகள் நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் திட்டத்தில் இருந்த மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டு விபி ஜி ராம் ஜி என்ற பெயரால் மசோதா அழைக்கப்பட்டதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

டிச.16 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவை வாபஸ் பெறும்படி எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தன. ஆனால் அதை மோடி அரசு ஏற்கவில்லை. மேலும் மசோதா மீது தொடர் விவாதம் நடந்து வந்தது. இதை தொடர்ந்து ஜி ராம் ஜி மசோதாவிற்கு எதிராக நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பேரணி நடத்தினர். பிரம்மாண்ட பதாகையை ஏந்தியபடி, காந்தி சிலையிலிருந்து நாடாளுமன்ற வளாகம் வரை பேரணியாகச் சென்ற எம்பிக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால், திமுகவின் கனிமொழி, டி. ஆர். பாலு, ஆ. ராசா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இ. டி. முகமது பஷீர், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) அரவிந்த் சாவந்த், ஆர்.எஸ்.பி.யின் என். கே. பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அதை தொடர்ந்து மக்களவை கூடியதும் விபி ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர்.

அமளிக்கு மத்தியில் மசோதா மீது நடந்த 8 மணி நேர விவாதத்திற்கு பதில் அளித்து வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பேசியதாவது: மகாத்மா காந்தி போற்றிய கொள்கைகளை எதிர்க்கட்சியான காங்கிரஸ் பலமுறை கொன்றுவிட்டது. அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே காங்கிரஸ் அவரது பெயரைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, உஜ்வாலா யோஜனா, ஸ்வச் பாரத் இயக்கம், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட உறுதியான வீடுகள் மூலம் மகாத்மா காந்தியை வாழ வைக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட போது தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் என்று தான் பெயரிட்டது. அப்போது மகாத்மா காந்தியின் பெயர் சேர்க்கப்படவில்லை. பின்னர் 2009 பொதுத் தேர்தல் வந்தபோது, ​​வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சிக்கு மகாத்மா காந்தியின் நினைவு வந்தது. ​​விபிஜி ராம் ஜி மசோதா மூலம் வேலைவாய்ப்பை மேம்படுத்த நாங்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். இதில் உருவாக்கப்படும் அனைத்து சொத்துக்களும் விக்சித் பாரத் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்புத் தொகுப்பில் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு எதிராக அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள், அவையின் மையப்பகுதிக்குச் சென்று, விபிஜி ராம் ஜி மசோதாவின் பிரதிகளை கிழித்து, சபாநாயகரை நோக்கி வீசினர். அப்போது குறுக்கிட்ட சிவராஜ்சிங் சவுகான்,’ எதிர்க்கட்சியினர் காந்தியின் லட்சியங்களைக் கொலை செய்கிறார்கள். நான் நேற்று அதிகாலை 1:30 மணி வரை எம்பிக்களின் பேச்சைக் கேட்டேன். உங்கள் கருத்தை மட்டும் கூறிவிட்டு, மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்காமல் இருப்பதும் ஒரு வகை வன்முறைதான்’ என்றார்.

காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், மசோதாவை முழுமையாக ஆய்வு செய்ய நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவை வலியுறுத்தினார். ஆனால் புதன்கிழமை இரவு நள்ளிரவு கடந்தும் கட்சி வேறுபாடின்றி 98 உறுப்பினர்கள் விரிவாகப் பேசியதாகவும் கூறிய, ஓம்பிர்லா அந்த கோரிக்கையை நிராகரித்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் விபிஜி ராம் ஜி மசோதாவை மக்களவை நிறைவேற்றியது. மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, சபாநாயகர் ஒம்பிர்லா மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். மாநிலங்களவையில் நேற்று மாலை 6.40 மணிக்கு விவாதம் தொடங்கியது.

* 2 திட்டங்களுக்கும் என்ன வேறுபாடு?
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம்
* தேவை அடிப்படையிலானது, அதாவது வேலைக்குத் தேவை இருந்தால் அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.
* ஊதியத்தில் 100 சதவீதம் ஒன்றிய அரசால் செலுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் மூலப்பொருட்களுக்கான செலவு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 75:25 என்ற விகிதத்தில் பகிரப்படும்.
* ஆண்டு முழுவதும் வேலை கோரலாம்
* நீர் பாதுகாப்பு, வறட்சித் தடுப்பு, நீர்ப்பாசனம், பாரம்பரிய நீர்நிலைகளைப் புதுப்பித்தல், நில மேம்பாடு மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு போன்ற பரந்த வகைகளாகப் பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
* திட்டங்களைக் கண்டறிவதற்கு கிராம பஞ்சாயத்து பொறுப்பாகும். செய்ய வேண்டிய பணிகளின் தன்மை மற்றும் தேர்வு, ஒவ்வொரு பணித்தளத் தேர்வுக்கான வரிசைமுறை போன்றவை தொடர்பான திட்டங்களும் முடிவுகளும் கிராம சபை அல்லது வார்டு சபையின் திறந்த கூட்டங்களில் எடுக்கப்பட்டு, பஞ்சாயத்தால் அங்கீகரிக்கப்படும்.
* பஞ்சாயத்துகளுக்கு வகைப்பாடு எதுவும் இல்லை.
* ஊழியர்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை

விபி-ஜி ராம் ஜி
* 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்பிற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கும்.
* மாநிலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டை வழங்குகிறது, அதற்கு அப்பாற்பட்ட எந்தவொரு செலவையும் மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
* மாநில அரசுகள் முன்பை விட அதிக செலவுப் பங்கை ஏற்கும். வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், சட்டமன்றம் உள்ள மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதிப் பொறுப்பு பகிரப்படும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு, முழுச் செலவையும் ஒன்றிய அரசே ஏற்கும்.
* விதைப்பு மற்றும் அறுவடை போன்ற உச்ச விவசாயப் பருவங்களை உள்ளடக்கிய ஒரு காலத்தை மாநில அரசு அறிவிக்கும், அந்தக் காலத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை கோர முடியாது.
* நீர் தொடர்பான பணிகள் மூலம் நீர் பாதுகாப்பு, முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தணிப்பதற்கான பணிகள்.
* புதிய திட்டத்தின் கீழ் செலவின் அடிப்படையில் குறைந்தபட்சம் 50 சதவீதப் பணிகளை, கிராம பஞ்சாயத்துகள் மூலம் செயல்படுத்த, திட்ட அதிகாரி ஒதுக்குவார். புதிய திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள், கிராம பஞ்சாயத்துகளால் தயாரிக்கப்பட்டு, பிரதம மந்திரி கதி சக்தி தேசிய முதன்மைத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட விக்சித் கிராம பஞ்சாயத்து திட்டங்களிலிருந்து உருவாகும்.
* ஒவ்வொரு பஞ்சாயத்தும், வளர்ச்சி அளவுருக்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஏ,பி,சி ஆகிய வகைகளின் கீழ் அதன் வகைப்பாட்டின் அடிப்படையில், முழுமையான திட்டங்களைத் தயாரிக்கும்.
* பயோமெட்ரிக் அங்கீகாரம், மொபைல் அடிப்படையிலான பணித்தளக் கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட ஒரு விரிவான டிஜிட்டல் பதிவு செய்யப்படும்.

* கிராமப்புற வேலைவாய்ப்பை முடிவுக்குக் கொண்டுவரும்: பிரியங்கா காந்தி ஆவேசம்
விபி ஜி ராம் ஜி சட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளா் பிரியங்கா காந்தி தெரிவித்தார். மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’ நாங்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்ப்போம். அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக இதை எதிர்க்கின்றன. இந்த மசோதா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும். எந்தக் கோணத்தில் இந்த மசோதாவைப் பார்த்தாலும், வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக அதிகரிப்பது அவர்களின் ஏமாற்று வேலை.

இந்த மசோதாவை கவனமாகப் படிப்பவர் எவருக்கும், இந்தத் திட்டம் அடுத்த சில நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பது தெரியும். இந்தச் சுமை மாநிலங்களின் மீது விழும்போது, ​​இந்தத் திட்டம் மெதுவாக முடிவுக்குக் கொண்டுவரப்படும். ஏனெனில் மாநில அரசாங்கங்களிடம் போதுமான பணம் இல்லை, குறிப்பாக இந்தத் திட்டம் மிகவும் தேவைப்படும் மாநிலங்களிடம் பணம் இல்லை. இது ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரானது, நாங்கள் இதை கடுமையாக எதிர்ப்போம்’ என்றார்.

* விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு கூடுதல் நிதி
அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில்,’ விபி ஜி ராம் ஜி திட்ட விரிவாக்கத்திற்கு மொத்தம் ரூ. 1,51,282 கோடிக்கு நிதி ஒதுக்கீடு முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், ஒன்றிய அரசின் பங்கு ரூ. 95,000 கோடி என்றார்.

* காங்கிரஸ் செயற்குழு டிசம்பர் 27ல் கூடுகிறது
காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க டிசம்பர் 27 அன்று கூடுகிறது. பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெறும் காங்கிரஸ் செயற்குழுவின் முதல் கூட்டம் இதுவாகும். 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வியூகமும் இதில் வகுக்கப்படும் என்று தெரிகிறது.

* அவையில் மேஜைகளின் மேல் ஏறி நிற்பதை மகாத்மா காந்தி ஏற்றுக்கொள்வாரா?
வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில்,’ மசோதாவின் பெயர் குறித்து ஏன் இவ்வளவு அமளி? தங்கள் நடத்தை மூலம், எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை அவமானப்படுத்திவிட்டன. நாடாளுமன்ற மரபுகளைச் சிதைத்துவிட்டன, மேலும் ஜனநாயகத்தை குண்டர் ராஜ்ஜியமாக மாற்றிவிட்டன. நாடாளுமன்றத்தில் மேசைகளின் மீது ஏறி நின்று எதிர்க்கட்சிகள் செய்யும் இந்த வகையான அவமானகரமான நடத்தையை மகாத்மா காந்தி ஏற்றுக்கொள்வாரா?’ என்றார்.

Related Stories: