மும்பை: மகாராஷ் டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி அரசில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் மாணிக்ராவ் கோகடே. கடந்த 1995ல் இவரும், இவரது சகோதரர் சுனில் கோகடேவும் குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீட்டை பெற, குடும்ப ஆண்டு வருவாய் ரூ.30,000 மட்டுமே எனவும், நகரில் சொந்த வீடு இல்லை எனவும் போலி ஆவணம் சமர்ப்பித்து, முதல்வரின் 10 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வீடு பெற்றனர். இது தொடர்பாக மறைந்த முன்னாள் அமைச்சர் துக்காராம் டிகோலே மோசடி வழக்கு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நாசிக்கில் உள்ள சர்க்கார்வாடா காவல் நிலையத்தில் கோகடே சகோதரர்கள் மற்றும் மேலும் 2 பேர் மீது போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட குற்றப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சுமார் 30 ஆண்டாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மாணிக்ராவ் கோகடே மற்றும் அவரது சகோததரர் சுனில் கோகடே ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ரூ.50,000 அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதன் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நாசிக் கோர்ட், தண்டனையை உறுதி செய்தது. கோகடேயை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அவரது இலாகா பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோகடே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
