மார்க்சிஸ்ட் தொண்டரை கொல்ல முயற்சி பாஜ கவுன்சிலர் உள்பட 10 பேருக்கு 36 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே வீடு புகுந்து மார்க்சிஸ்ட் தொண்டர், அவரது குடும்பத்தினரை வெடிகுண்டு வீசி வெட்டிக்கொல்ல முயற்சித்த சம்பவத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ கவுன்சிலர் உள்பட 10 பாஜ தொண்டர்களுக்கு 36 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே தலச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். மார்க்சிஸ்ட் தொண்டர். தலச்சேரி நகரசபை முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்தநிலையில் கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி இரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த பாஜ தொண்டர்கள் வெடிகுண்டு வீசி ராஜேஷ், அவரது அண்ணன், தாயை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து தலச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜவை சேர்ந்த பிரசாந்த் என்பவர் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தலச்சேரி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரசாந்த் உள்பட பாஜவை சேர்ந்த 10 பேருக்கும் 36 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. சமீபத்தில் கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிரசாந்த் தலச்சேரி நகரசபையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவருக்கு 36 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கவுன்சிலர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: