தலைவர் பிறப்பதில்லை அவர் எழுகின்றார்

(நீதித்தலைவர்கள் 13:1-14)

இஸ்ரவேல் மக்களின் வரலாறு நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகிறது. ஒரு சிறிய நாடோடிச் சமூகம் (Nomadic Tribe) எவ்விதம் ஒரு குடியமர்ந்த சமூகமாக மாறி, பின்னர் எவ்வாறு அது அரசர்கள் தலைமையில் இயங்கும் ஒரு நாடாக மாறியது, அதன் பின்னர் சிறையிருப்புக்கும், அடிமைத் தனத்திற்கும் ஆளானது எப்படி என்பதை திருமறையில் காணமுடிகிறது. மேற்கண்ட பகுதியில், அரசமைந்த காலத்திற்கு முன் அது தனது எதிரிகளிடமிருந்து தன்னை எவ்விதம் பாதுகாத்துக்கொண்டது என்கிறபதிவைக் காணமுடிகிறது.

நாகரிகம் என்று சொல்லப்படும் நாடு களின் எல்லை, அவற்றின் சுயநிர்ணயம் வரையறுக்கப்பட்டு அண்டை நாடுகளால் அது ஏற்றுக்கொள்ளப்படாத காலத்தில், பல்வேறு  இனக்குழுக்களிடையே அடிக்கடி போர், உயிர்க்கொலை, ஆக்கிரமிப்பு, கொள்ளையடித்தல் சர்வசாதாரணமாக நடைபெற்றுவந்தது.

இஸ்ரயேல் நாடு அரசராட்சி முறைமையை ஏற்பதற்கு முன்னர், தனிநபர்கள் சிலர் தலைமைத்துவத்தை ஏற்று செயல்பட்டனர். அவர்களின்

முக்கிய பணி எதிரிகள் தாக்கும் போது தன்னுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டிச்சென்று, எதிர்த் தாக்குதல் நடத்தி தமது மக்களையும் அவர்களின் உடைமைகளையும் காப்பது. உள்ளூர் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது ஆகும்.

இந்த வரிசையில்தான், சிம்சோன் எனும் நீதித் தலைவர் வருகின்றார். இவர் இஸ்ரயேல் மக்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் தலைமை வகித்தார்.

இவரைப்பற்றிய பதிவுகள் ஒரு வீரசாகச (Heroic) வரலாறு போன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்சோன் தலைமை வகித்த காலத்தில், இஸ்ரயேல் மக்களுக்கு பெலிஸ்தியர்களிடமிருந்து அச்சுறுத்தல் இருந்தது.

சிம்சோன் துணிவுடன் செயல்பட்டு பெலிஸ்தியர்களைத் தாக்கி அழிக்கின்றார். இதன் காரணமாக பெலிஸ்தியர் அச்சம் கொண்டு இஸ்ரயேலர்களைத் தாக்குவதை நிறுத்தி இருந்தனர். ஆனால் சிம்சோனின் அதீத பலம் அவனுக்கு எங்கிருந்து வருகிறது என்பதை அவனது காதலியின் மூலம் அறிந்து, சிம்சோன் வீழ்த்தப்படுகிறார். சிம்சோனின் கதைமூலம் நமக்குக் கிடைக்கும் செய்தி;

 

1) மக்களின் சூழல் அறிந்து அவர்களின் இக்கட்டுகள் மற்றும் ஆபத்துகளில் அவர்களைக் காப்பாற்றக் களமிறங்குபவர்தான் தலைவர். தலைவர்கள் பிறப்பதில்லை அவர்கள் எழுகிறார்கள் என்பதாகும்.  

2) ஒரு தலைவர் அல்லது ஒரு நாடு தனது எதிரிகளால் வீழ்த்தப்பட்டதற்கு நண்பர்களின் துரோகம் துணைபோகிறது.

3) கடவுள் பக்தியையும் ஒழுக்கத்தையும் தாண்டி, மக்களுக்காக சேவை செய்வதும் முக்கியம். எசாயா தீர்க்கர் பிறர்க்கு எவ்வகையிலும் பயனளிக்காத பக்தியின்மீது தனது விமர்சனத்தை வைக்கிறார் (எசாயா 58:1-10) என்பதை இணைத்துப் பார்ப்பது இதற்கு உதவும்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Related Stories: