சென்னை: இந்தி மற்றும் தெலுங்கில் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார், பூஜா ஹெக்டே. தற்போது தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள அவர், ரெட்ரோ பட கேரக்டரால் பூரிப்பில் இருக்கிறார். அவர் கூறும்போது, ‘‘சினிமாவில் சில கேரக்டர்கள் ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும். சில கதாபாத்திரங்கள் மட்டுமே அதிக பிரமிப்பை ஏற்படுத்தும்.
ஆனால், ‘ரெட்ரோ’ படத்தில் ருக்மணி என்ற டாக்டர் வேடத்தில் நடித்தது, ரசிகர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார். அன்றாடம் நமக்கு தெரிந்த ஒருவரை போல் உணர வைக்கும் வகையிலும், அடுத்த வீட்டு பெண் போன்ற தோற்றத்திலும் எல்லா ரசிகர்களையும் ஈர்த்திருக்கிறார். படத்தில் அவர் அதிகமாக பேசவில்லை.
ஆனால், பல காட்சிகளில் அவரது மவுனத்தின் மூலம் உணர்வுகளை கடத்தினார். ‘ரெட்ரோ’ படத்தில் முதல்முறையாக தமிழில் டப்பிங் பேசியுள்ளார். சூர்யாவுடன் அவர் ஆடிய ‘கனிமா’ என்ற பாடல் ஏற்கனவே டிரெண்டிங்கில் இருந்த நிலையில், தற்போது பூஜா ஹெக்டே படத்தில் தோன்றிய காட்சிகள் வைரலாகி வருகிறது. தமிழில் ரஜினிகாந்துடன் ‘கூலி’, விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா 4’ ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
