ஆஞ்சநேயர் அருளால் வாழ்வினில் சாதிப்பார்

?+2 வரை படித்துள்ள என் மகன் ராணுவத்தில் சேர பல முறை முயற்சி செய்தும் கடைசி சுற்றில் ஓட முடியாமல் தோல்வி அடைந்து விடுகிறான். அவன் மிகவும் மனவேதனையில் உள்ளான். தற்போது தனியார் கம்பெனியில் தினகூலி வேலை செய்து வருகிறான். அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உரிய பரிகாரம் கூறுங்கள்.

- கணேசன், ராணிப்பேட்டை.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தை தந்தாலும் உத்யோக ஸ்தானம் அதற்கு ஏற்றதாக இல்லை. ஜீவன ஸ்தானம் என்னும் பத்தாம் வீட்டின் அதிபதி சந்திரன் சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் நீசம் பெற்ற குருவுடன் இணைந்து அமர்ந்திருப்பதும் பத்தாம் வீட்டில் வக்ரம் பெற்ற புதனின் அமர்வு நிலையும் சுகத்தினைத் தரும் உத்யோகமாக அமைத்துத் தரும். இவர் உத்யோக ரீதியாக ராணுவத்தினரைப் போன்று சிரமத்தினை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசுத்தரப்பு உத்யோகத்திற்கான வாய்ப்பு குறைவு. தனியார் உத்யோகமாக இருந்தாலும் நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவரது ஜாதக பலத்தின்படி வருகின்ற 1.8.2022-ற்குள் நல்ல உத்யோகத்தில் சேர்ந்துவிடுவார். உங்கள் மகனை புதன்கிழமை தோறும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தை உச்சரித்துக் கொண்டு சந்நதியை 17 முறை வலம் வந்து வணங்கி பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். வாழ்வினில் சாதிப்பார்.

“அசாத்ய சாதக ஸ்வாமிந் அசாத்யம் தவகிம்வத

 ராமதூத க்ருபாசிந்தோ மத்கார்யம் சாதய ப்ரபோ,”

?தனியார் கம்பெனியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரியும் நான் ஓவியம் கற்றுத் தேர்ந்து கடந்த வருடம் கண்காட்சி நடத்தினேன். தற்போது ஓவியப் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன். அத்துடன் நாங்கள் செய்த நலங்கு மாவு, மூலிகைப் பொருட்கள் சுற்றத்தாரிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதையும் தொழிலாக ஆரம்பிக்க சொல்கிறார்கள். எனக்கு எந்த தொழிலில் இறங்குவது என்று குழப்பமாக உள்ளது. என்னுடைய தொழில் மற்றும் நல்ல வாழ்க்கை துணை அமைய உங்கள் ஆசிர்வாதமும்

பரிகாரமும் வேண்டும்.

- ஜோதிஸ்ரீ , கோவை.

புதிய முயற்சிகளில் தினமும் பல விஷயங்களை கற்றுக்கொள்வதாக எழுதியுள்ளீர்கள். முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள். உங்கள் பெயருக்கேற்ற வகையில் வாழ்வினில் ஒளிவீசுவீர்கள். உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் குரு ஆட்சி பலத்துடன் சுக்கிரனின் சாரம் பெற்று அமர்ந்துள்ளது, உங்களை ஒரு நல்ல குருவாக பெயரெடுக்க வைக்கும். நீங்கள் சுயமாக ஓவியக்கூடம் நடத்துவதுடன் ஓவியப் பயிற்சி வகுப்புகளை நடத்தி நூற்றுக்கணக்கான மாணவர்களை ஓவியக்கலையில் சிறந்து விளங்க துணை நில்லுங்கள். ஜென்ம லக்னத்திலேயே உண்டாகியிருக்கும் சனி-கேதுவின் இணைவு மூலிகைப் பொருட்களை தயாரிக்கும் பணிக்கும் துணைநிற்கும். ஆக இந்த இரண்டு பணிகளையும் உங்களால் நல்லமுறையில் மேற்கொள்ள இயலும். திருமண யோகம் என்பது 5.12.2022 முதல் துவங்குகிறது. அதனால் அவசரம் ஏதுமின்றி உங்கள் பெற்றோரிடம் நிதானமாக வரன் தேடச் சொல்லுங்கள். ஏழில் ராகு இருந்தாலும் ஏழாம் பாவக அதிபதி புதன் இரண்டில் அமர்ந்திருப்பதால் நல்ல குணமுள்ள மணாளனாக அடைவீர்கள். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். சிறப்பு பரிகாரம் ஏதும் அவசியமில்லை. உங்கள் முயற்சிகளில் என்றென்றும் வெற்றி கண்டுவர வாழ்த்துக்கள்.

?35 வயதாகும் என் மகனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. தடைக்கான காரணத்தை கண்டறிந்து கூடிய சீக்கிரம் திருமணம் நடைபெற வழிகாட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

- அரிதாஸ், கரூர்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சுக்ர புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் உத்யோகமும் அவர் பெற்றுவரும் குறைவான சம்பளமும் திருமணத் தடைக்கான காரணமாக இருக்கலாம். அவரது ஜாதகத்தைப் பொறுத்த வரை, ஏழாம் வீடாகிய களத்ர ஸ்தான அதிபதி சூரியன் நான்கில் அமர்ந்திருப்பதும் குடும்ப ஸ்தானத்தில் குருவின் ஆட்சி பலமும் நல்ல நிலையே. உறவு முறையிலேயே மணப்பெண் அமைவார். திருமணத்திற்குப் பின் அவர் சுயமாக தொழில் தொடங்குவது நல்லது. அவர் அடுத்தவர்களிடம் செய்யும் வேலையையே சுயதொழிலாகச் செய்து நன்றாக சம்பாதிக்க இயலும். திருமண யோகம் மற்றும் சுயதொழில் தொடங்கும் யோகம் ஆகிய இரண்டிற்கும் தற்போது நடந்து வரும் நேரமே சாதகமாக உள்ளது. சம்பாத்யத்தை உயர்த்திக்கொண்டால் திருமணம் எந்தவித தடையுமின்றி நடந்துவிடும். உங்கள் மகனை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று அம்பாள் சந்நதியில் ‘தனம் தரும் கல்வி தரும்’ என்று தொடங்கும் அபிராமி அந்தாதி பாடலை படித்து பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். விரைவில் திருமணம் நடைபெறுவதோடு அவரது வாழ்விலும் நல்லதொரு வளர்ச்சியைக் காண்பீர்கள்.

திருக்கோவிலூர்

ஹரிபிரசாத் சர்மா

Related Stories: