சாதிக்கு எதிராக போராடிய ஜோதிராவின் கதை; இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பால் படத்துக்கு தடை

மும்பை: இந்தியில் நடிகர் ஆனந்த் மகாதேவன் இயக்கிய ‘பூலே’ படத்துக்கு ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு காரணமாக, இப்படத்தின் ரிலீஸ் தேதி 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது. சாதி மற்றும் பாலின பாகுபாட்டுக்கு எதிராக குரல் கொடுத்த ஜோதிராவ் பூலே, அவரது மனைவி சாவித்ரி பாய் பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமான ‘பூலே’, நேற்று முன்தினம் திரைக்கு வருவதாக இருந்தது. இதை நடிகரும், இயக்குனருமான ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்துக்கு ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு காரணமாக, படத்தின் ரிலீஸ் தேதியை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர். மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர், இப்படத்தில் தங்களை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதாக புகார் கூறி, படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில இந்துத்துவ அமைப்புகளும், இப்படம் பொய்யான தகவல்களை சொல்ல இருப்பதாக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு குழுவினர், முதலில் ‘யு’ சான்றிதழ் வழங்கினர். பிறகு படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும், கடும் எதிர்ப்புகளும் கிளம்பியதை பார்த்து, படத்தில் சில காட்சிகளையும், வசனங்களையும் ‘கட்’ செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். சாதி குறித்து சொல்லப்படும் வாய்ஸ்ஓவரையும், சாதிய அமைப்பை விளக்கும் காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சில வசனங்களை மாற்ற சொல்லியிருக்கின்றனர். பிராமண சமூகத்தினரிடம் இருந்து வந்த கடிதங்கள் தொடர்பாக பேசிய ஆனந்த் மகாதேவன், ‘இப்படத்தின் டிரைலர் குறித்து சில தவறான புரிதல்கள் இருக்கிறது. படத்தை பார்ப்பதில் எந்தவொரு தொந்தரவும் இருக்காது என்று, சில சந்தேகங்களை அகற்ற வேண்டியிருக்கிறது’ என்றார்.

Related Stories: