ருத்திராட்சத்தைப் போற்றிய மாணிக்க நாச்சியார்

முன்னாளில் கோயிற் பெண்கள் என்னும் திருக்கூட்டத்தார் ஆலயப் பணியாளர்கள் கூட்டத்தில் இருந்தனர். இவர்கள் அந்தக் கோயிலில் இருக்கும் இறைவனைத் தனது கணவனாக தலைவனாக எண்ணி வாழ்ந்தனர். இவர்கள் பதியிலார் என்றும் அழைக்கப்பட்டனர். கோயிலைத் தூய்மை செய்தல், மெழுகுதல், கோலமிடுதல், பூசை வேளையில் துணை நிற்றல், கவரி வீசுதல், ஆலவட்டம் சுழற்றுதல், தீபம் ஏந்துதல், இறைவன் முன்பு நாட்டியமாடுதல், இசைக் கருவிகளை இசைத்தல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். இவர்கள் தங்களின் தெய்வீகப் பணியின் காரணமாகவும், சிவபக்தியின் காரணமாகவும் சமுதாயத்தில் பெருமை பெற்றிருந்தனர். இவர்கள் இறைவனுக்குத் தம்மை அடிமையாக்கிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ளாமல், ஆண் துணையின்றியே வாழ்க்கை நடத்தினர் என்றாலும் இவர்களில் சிலர் வாழ்க்கையை நடத்தப் பொருள் வேண்டும் என்பதால், தங்களை ஆதரிப்பவரோடு திருமணம் செய்யாது மண வாழ்வையும் மேற்கொண்டிருந்தனர்.

திருவாரூரில் தியாகராஜருக்குப் பணிபுரிந்து வந்த இத்தகு கோயிற் பெண்களின் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்தவள் மாணிக்க நாச்சியார். மிகுந்த சிவபக்தி நிரம்பியவள் சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதைப் போலவே சிவனடியார்களுக்கும் தொண்டு செய்பவள். ஒரு சமயம் இவரது பெருமையை உலகுக்கு உணர்த்தத் தியாகேசர் விருப்பம் கொண்டார். வாலிப வயதைக் கடந்தவராக, சிவனடியார் வடிவங் கொண்டார். ஆலயத்தில் பணி செய்து கொண்டிருக்கும் மாணிக்க நாச்சியாரிடம் சென்றார்.

‘‘பெண்ணே உனது பக்தி உயர்ந்ததாக இருக்கிறது. நான் வடநாட்டில் இருந்து வருகிறேன். இந்தத் திருத்தலத்தில் சில நாள் தங்கியிருக்க விரும்புகிறேன். உன்னோடு தங்கியிருப்பது சுகம் என்று உணர்கிறேன். உன்னை ஆதரிக்கும்படியாக பொருள் என்னிடம் இல்லை. என்னிடம் இருப்பவை இந்த உருத்திராட்ச வடங்கள் மட்டுமே. இவை பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், அரிய பொருட்கள். இவற்றை ஏற்றுக்கொண்டு என்னை உனது வீட்டில் வைத்துக் கொள்’’ என்றார்.

அவரது தோற்றமும், அன்பான பேச்சும் மாணிக்க நாச்சியாரைக் கவர்ந்தன, ‘‘எனக்குச் செல்வம் முக்கியமானதல்ல. இந்த ருத்திராட்சங்களைப் பெரிதும் போற்றுகின்றேன். இவை மதிப்பு மிக்கவை என்பதை உணர்ந்துள்ளேன். தாங்கள் எனது வீட்டில் இருந்து என்னுடன் இன்புற்று இருக்கலாம்’’ என்றாள்.

அவள், அன்றைய பூசைகள் முடியும் வரை ஆலயத்தில் இருந்து வேண்டிய பணிகளைச் செய்தாள். சிவனடியாராக வந்த இறைவனும் அவளது பணிகளுக்குத் துணை நின்றார். பூசைகள் நிறைவுற்று, கோயில் கதவுகள் அடைக்கப்பட்டதும், மாணிக்க நாச்சியாரும் சிவனடியாரும் வீடு திரும்பினர்.

நாச்சியார் அவருக்கு அமுது படைத்தார். நெடுநேரம் அவர்கள் இன்பமுடன் பேசி மகிழ்ந்திருந்தனர்.விடிவதற்குச் சில நாழிகைகளே இருந்தன. அப்போது சிவனடியார் சுருண்டு விழுந்தார். அவர் கண்கள் நிலை குத்திட்டன. நாச்சியாரின் பணியாட்கள் விரைந்து சென்று மருத்துவரை அழைத்து வந்தனர். மருத்துவர் பரிசோதித்து சிவனடியார் மாண்டு விட்டார் என்று கூறினார்.

அதைக் கேட்ட நாச்சியார் ஓவென்று கதறி அழுதாள். அதற்குள் தெருவில் இருந்தவர்கள் அங்கு கூடி விட்டனர். மற்றைய கோயிற்பெண்கள் அவளிடம், ‘‘இவர் ஊருக்குப் புதியவர். உன் வீட்டில் தங்கியிருந்தார். எதிர்பாராது இறந்து விட்டார். இந்த உடலை அரச சேவகர்கள், கோயிற் பணியாளர்களிடம் சொல்லி அப்புறப்படுத்திவிடு. நம்மை ஆதரிக்க வந்தவர் மாண்டு போனதற்குக் கலங்கலாமா? அது நமக்கு உரியதல்ல. நாம் கோயிலுக்குச் சொந்தமானவர்கள் அல்லவா?’’ என்றனர்.

மாணிக்க நாச்சியாரோ, சில நாட்களுக்கு, ‘‘நான் இவரை எனது கணவனாக வரித்திருக்கிறேன். அதனால் குலமகள் போல் இவரோடு மாள்வதையே விரும்புகின்றேன். அருள்கூர்ந்து சிதையை மூட்டுங்கள்,’’ என்றாள். ஊரார்கள் மாணிக்க நாச்சியாரின் சிவ சேவையையும் கோயிற் பணியையும் நன்கு அறிந்தவர்களாதலின் அவளிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தனர். நாச்சியாரோ பிடிவாதமாக உடன் கட்டை ஏறுவதில் உறுதியாக இருந்தார். பிறகு ஊர் மக்கள் ஊருக்கு வடக்கில் பெரிய சிதையை அடுக்கினர்.

மாணிக்க நாச்சியார் அதன்மீது அமர்ந்தார். அவர்தம் மடியில் அடியவர் உடலைக் கிடத்திக் கொண்டார். சிதைக்குத் தீமூட்டினர். தீ கொழுந்து விட்டு எரிந்தது. அக்கினி ஜ்வாலைகள் உஷ்ணத்தைப் பரப்பின. எல்லாம் சிறிது நேரந்தான். அந்தச் சிதை அப்படியே குளிர்ந்து மலர் மேடையானது. மாணிக்க நாச்சியார் அந்த மலர்க்குவியல் மீது திருமகள் போல் காட்சி தந்தாள்.

விண்ணில் தியாகேசர் கமலாம்பிகையோடு ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். மாணிக்க நாச்சியார் அவரைத் தொழுதார். அப்படியே விண்ணில் எழுந்து இறைவன் திருவடியில் கலந்தாள். ருத்திராட்சத்தைப் போற்றிய புனிதவதியான மாணிக்க நாச்சியார் வாழ்ந்த வீடு தெய்வத் தலமானது. அங்கு சிவாலயம் அமைக்கப்பட்டது. அது இப்போதும் மாணிக்க நாச்சியார் கோயில் என்று வழங்குகிறது.தியாகேசர் ஆழித்தேரில் அமர்ந்ததும், மாணிக்க நாச்சியார் ெபயரால் அவருக்கு அர்ச்சனையும், தீபாராதனையும் செய்யும் வழக்கம் இருக்கிறது என்று தமிழ்த்தாத்தா உ.வே.சா. குறித்துள்ளார்.

மயிலை சிவசுந்தரன்

Related Stories: