விமர்சனம்: ராஜாசாப்

தாய், தந்தை இல்லாத பிரபாஸ், பாட்டி ஜரினா வஹாப் மேற்பார்வையில் வளர்கிறார். ஜரினா வஹாப் கணவர் சஞ்சய் தத், திடீரென்று காணாமல் போகிறார். இதனால் ஞாபகமறதியால் அவதிப்படும் பாட்டிக்கு ஆறுதல் சொல்லும் பிரபாஸ், தாத்தாவை கண்டுபிடிக்க செல்கிறார். அப்போது நிதி அகர்வால், மாளவிகா மோகனனை சந்திக்கிறார். இந்நிலையில், ஒரு பாழடைந்த அரண்மனையில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அப்போது தாத்தாவை பற்றிய ஒரு உண்மையை சமுத்திரக்கனி மூலம் அறிந்து ஆவேசப்படும் பிரபாஸ், பாட்டியிடம் அந்த விஷயத்தை சொல்கிறார். முதலில் அதிர்ச்சி அடையும் பாட்டி, பிறகு பேரனுக்கு ஒரு உத்தரவு போடுகிறார். அது எதற்காக? தாத்தா செய்த விஷயம் என்ன? ஜரினா வஹாப் என்னவாக இருந்தார் என்பது மீதி கதை.

சுறுசுறுப்பான இளைஞனாக வருகின்ற பிரபாஸ், பாட்டியிடம் பாசத்தை பொழிகிறார். தனது காதலிகள் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் ஆகியோருடன் செம லூட்டி அடிக்கிறார். தாத்தாவை பற்றி தெரிந்து கோபத்துடன் பழிவாங்குகிறார். மந்திரக்கார மாயாவியாக சஞ்சய் தத், அப்பாவி மனைவியாக ஜரினா வஹாப், ரகசியத்தை உடைப்பவராக சமுத்திரக்கனி, மகாராணியாக அம்மு அபிராமி ஆகியோர் நன்கு நடித்துள்ளனர். நிதி அகர்வாலும், மாளவிகா மோகனனும் கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட்டுள்ளனர். நடிப்பில் நிதி அகர்வால் ஓ.கே. திடீரென்று ஆக்‌ஷனில் குதிக்கும் மாளவிகா மோகனன் கலக்கியுள்ளார். ரித்தி குமார் ஈர்க்கவில்லை.

பாடல் காட்சிகளை கலர்ஃபுல்லாகவும், அரண்மனை காட்சிகளை பயங்கரமாகவும் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. படத்தின் நீளம் அதிகம் என்பதால், சோர்வு ஏற்படுவதை எடிட்டர் கவனித்திருக்கலாம். அரங்கு பிரமிக்க வைத்துள்ளது. காதலுடன் காமெடி கலந்த ஹாரர் கதையில் ஹிப்னாடிஸம், மாந்திரீகம், அரச குடும்பம் என்று ஜனரஞ்சக விருந்து படைக்க முயற்சித்துள்ள இயக்குனர் மாருதி, அதில் பாதி கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறார்.

Related Stories: