ஹெச் ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் ’வீர தீர சூரன் : பாகம் 2’ . விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, மாருதி பிரகாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது. எதுவும் வேண்டாம் அமைதியான வாழ்க்கைதான் வேண்டும் என சந்தோஷமாக சொந்த பலசரக்குக் கடை, மனைவி, இரண்டு குழந்தைகள் சகிதம் வாழ்ந்து வருகிறார் காளி (விக்ரம்). உள்ளூர் இன்ஸ்பெக்டர் அருணகிரியின் (எஸ்.ஜே.சூர்யா) முன்பகைக்கு ஆளாகி என்கவுன்டருக்கு பயந்து ஓடும் பெரியவர் ரவி (ப்ருத்வி மற்றும் அவரது மகன் கண்ணன் (சுராஜ் வெஞ்சரமூடு).
இருவரும் ஒரு கட்டத்தில் காளியின் (விக்ரம்) உதவியை கேட்கிறார்கள். இவர்களுக்கு உதவ காளி வந்தாரா இல்லை, அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்கள் என்ன என்பது மீதிக் கதை. இந்தப் படத்தில் விக்ரம் அவ்வளவு மெனெக்கெட வேண்டாம். இதுதான் அளவு எனக் கொடுத்த மீட்டரில் உடல் மொழி, பேச்சு, காதல், சண்டை, என மனிதர் மாஸ். எந்த கதாபாத்திரமானாலும் அவருடைய மார்க்கண்டேயன் தோற்றம் எதற்கும் கச்சிதமாக பொருந்துகிறது. படம் முழுக்க இரவு நேரப்படப்பிடிப்பு படத்தின் புரமோஷன்களில் கடின உழைப்பு என விக்ரம் நிச்சயம் எதிர்கால நடிகர்களுக்கு எப்போதுமே சிறந்த உதாரணம்தான்.
துஷாரா விஜயன் எப்போதுமான நாயகியாக மிரட்டும் மனைவி, காதல், ரொமான்ஸ் என இருப்பினும் அவருடைய இயல்பான நடிப்பால் சாதாரண ஹீரோயின் பாத்திரத்தையும் கதையின் நாயகியாக மாற்றியிருக்கிறார். வசனம் அவ்வளவு சுத்தமாக அவரிடம் வந்து விழுகிறது. மிரட்டுவது, கொஞ்சுவது, அழுது தவிப்பது, கணவனை அலெர்ட் செய்வது என சபாஷ் துஷாரா. சுராஜ் வெஞ்சரமூடு… எப்போது தமிழுக்கு வருவார் எனக் காத்திருந்ததற்கு சிறப்பான நல்வரவு. எனினும் அவருடைய மலையாள படங்களின் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு எல்லாம் இந்தப் படத்தின் கேரக்டரை அளவிட முடியாது. இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் குறைவு எனினும் அவரின் தோற்றமும், உடல்மொழியும் கதாபாத்திரத்துக்கு மேலும் சிறப்பு செய்திருக்கிறது.
மாஸ் வில்லன் என்ட்ரீ, பஞ்ச், காதைக் கிழிக்கும் கனீர் குரல்கள் எல்லாம் எதுவும் இல்லாமல் புதிதான ஒரு போலீஸ் கேரக்டரில் கவனம் பெறுகிறார் எஸ்.ஜே.சூர்யா. எந்த பில்டப்பும் இல்லாமல் அதே சமயம் அவரைப் பார்த்தாலே ஏரியா ஸ்ட்ரிக்ட் இன்ஸ்பெக்டர் சாயலில் பயம் உண்டாக்கும் கேரக்டர். பாலஜியின் வெங்கட் பாத்திரமும் நம்மை ஈர்க்கத் தவறவில்லை. நல்லவரா, கெட்டவரா என சந்தேகத்திலேயே நம்மை வைத்திருக்கும் ஒரு கதாபாத்திரம்.
வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து சாப்பிடும் பெரியவர் குடும்ப உறவுகளில் துவங்கும் கதை நம்மை எங்கும் தலை திரும்ப விடாமல் ஆக்கிரமித்து மதுரையின் சிறு தெருக்கள், வயக்காடுகள், முச்சந்திகள், திருவிழா மொமெண்ட்கள் என கடத்திச் செல்கிறது கதைக்களம். ‘பண்ணையாரும் பத்மினியும்‘, ‘சித்தா‘ என இயல்பாகக் கதை சொல்லும் அருண் குமார் இந்தப் படத்திலும் அந்தத் திறமையால் பளிச்சிடுகிறார். இடைவேளை ஸ்பூஃப் அருமை. பக்க பலமாக தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு அருமையாக கைகொடுத்திருக்கிறது. இரவு தான் ஆனாலும் இரவு என நம்மை இடையூறு செய்யாதபடி மிக அற்புதமாக காட்சிகளை கொடுத்திருக்கிறார்.
பிரசன்னா ஜி.கே எடிட்டிங்கில் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்ந்து நம்மை அலெர்ட்டிலேயே வைத்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ‘ கள்ளூரும்‘ பாடல் மற்றும் ‘ ஆத்தி அடியாத்தி‘ பாடல்கள் மனதுக்கு இதம். பின்னணி காட்சிகள் இன்னொரு கதாபாத்திரம் போல் ஹைலைட்டாக கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. இரண்டாம் பாகம் என இந்தக் கதையை வெளியிட்டு விக்ரம் யார், துஷாரா யார், இவர்களுக்கும் பெரியவர் குடும்பத்துக்கும் உள்ள இணைப்பு என்ன? எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏன் இவர்கள் மீது பகை என பல கேள்விகளுடன் இந்த இரண்டாம் பாகம் , முதல் பாகத்துக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்து நிறைவாகியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் கதையை இதில் சேர்த்திருக்கலாமோ என்கிற எண்ணமும் நமக்குத் தோன்றும்.
மொத்தத்தில் விறுவிறுப்பான திரைக்கதை, எதார்த்தமான நடிப்பு, என அனைத்தும் ஒன்றுசேர்ந்து ‘வீர தீர சூரன்‘ படத்தை வெற்றிப் பாதையில் நகர்த்தியிருக்கிறது.