சென்னை: இதுவரை 11 மொழிகளில் 400 படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருப்பவர், ஆஷிஷ் வித்யார்த்தி. விக்ரமின் ‘தில்’ படத்தை தொடர்ந்து ‘பாபா’, ‘ஏழுமலை’, ‘பகவதி’, ‘தமிழன்’, ‘ஈ’, ‘கில்லி’, ‘ஆறு’, ‘உத்தம வில்லன்’, ‘மாப்பிள்ளை’ உள்பட தமிழில் 70 படங்களில் நடித்துள்ள அவர், கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:
எந்த மொழி படத்தில் நடித்தாலும், அந்த மொழியை புரிந்துகொள்ள முயற்சிப்பேன். அர்த்தம் புரிந்துபேசி நடித்தால்தான், அந்த கேரக்டருக்கு என்னால் நியாயம் செய்ய முடியும். தமிழில் மாறுபட்ட பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் என்னை ‘கில்லி அப்பா’ என்றே அழைக்கிறார்கள். அவர்கள் காட்டும் அன்பு என்னை நெகிழவைக்கிறது. தொடர்ந்து வில்லனாகவே நடித்து வருகிறேன்.
சில படங்களில்தான் காமெடி செய்துள்ளேன்.
எந்த கேரக்டர் கொடுத்தாலும் என் திறமையை வெளிப்படுத்துவேன். டைரக்டரின் ஆக்டராக இருக்க விரும்புகிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘சர்தார் 2’ படத்தில் நடிக்கிறேன். கார்த்தி ஒரு திறமைசாலி. அவருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். இத்தனை வருட அனுபவம் பெற்றிருந்தாலும், திரைப்படம் இயக்கும் எண்ணம் இல்லை. கடைசிவரை நடிகனாக மட்டுமே இருப்பேன். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.