சத்தியத்தை அடையாளம் காணுங்கள்!

ஆலயத்தில் போதகர் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தார். பிரசங்கம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது ஒரு பாட்டி இன்னொரு பாட்டியிடம், ‘‘அந்தப் போதகர் நரகத்தைப்பற்றி அங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி எவ்வளவு அனுபவபூர்வமாக பிரமாதமாகப் பேசினார் நீ கேட்டாயா’’ என்றார். நமக்குத் தெரிந்த விஷயங்களைப்பற்றி தெரிந்தவரையில்தான் பேச முடியும். தெரியாத விஷயங்களைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதனால்தான் கடவுளைப்பற்றி அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஞானி ஒருவர் தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்தார். அவருடைய ஒரு கையில் தீப்பந்தம், மறுகையில் ஒரு வாளித் தண்ணீர். எதிரே வந்தவர்களுக்கு இது வேடிக்கையாக இருந்தது.

‘‘என்ன இது?’’ என்று கேட்டனர்.

‘‘தண்ணீரும் நெருப்பும்.’’ என்றார் ஞானி.

‘‘அதுதான் எதற்கு என்று கேட்கிறோம்’’ என்றார் அவர்கள்.

‘‘அதற்கு ஞானி, நரகத்தீயை தண்ணீரால் அணைக்கப் போகிறேன். அப்படியே சொர்க்கத்தையும் கொளுத்தப் போகிறேன்.’’ கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஞானி தொடர்ந்தார். அப்போதுதான் நரக பயமோ, சொர்க்க ஆசையோ இல்லாமல் மக்கள் சத்தியத்தை நாடிக் கண்டுகொள்ள முடியும்.சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படும் மக்கள், நரகத்துக்குப் போய்விடக் கூடாது என்றும் விரும்புகிறார்கள். இந்த நினைவிலே வாழும் இன்றைய பக்தர்கள் சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்ளாமலேயே காலத்தைக் கழித்து விடுகிறார்கள்.

‘கத்தினால்தான் கடவுள் கண்ணைத் திறந்து பார்ப்பார், தட்டினால்தான் கதவு திறக்கும்.’ இது இன்றைய பக்தனது நம்பிக்கை!அந்த ஞானியிடம் ஒருவர் சொன்னார். ‘‘ஒருவன் விடாமல் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அந்தக்கதவு ஒருநாள் அவனுக்காகத் திறக்கத்தானே செய்யும்.’’ ஞானியின் முகத்தில் சிரிப்பு,

‘‘இப்படியே எவ்வளவு காலம் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்? கதவு எப்போது மூடி இருந்தது? இப்போது திறப்பதற்கு!’’

‘‘ஒருவர் இயேசுவிடம், ஆண்டவரே! மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?’’ என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது.

‘‘இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்று இயலாமற்போகும். ‘‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’’ என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங் கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது என பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம், நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது,  தீங்கு செய்வோர், அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் என உங்களிடம் சொல்லுவார். ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம்! கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.’’ - (லூக்கா 13: 23-30)

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories:

>