மம்மூட்டிக்கான சிறப்பு பூஜை தகவலை வெளியிட்டது யார்? மோகன்லாலுக்கு தேவசம்போர்டு பதிலடி

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மோகன்லால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருமுடி கட்டுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்தார். லூசிபர் படம் வெற்றி பெற பிரார்த்தனை செய்ய சென்றதாக கூறப்பட்டது. ஆனால் குடல் புற்று நோய் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் மம்மூட்டி நலம் பெற சிறப்பு பூஜை நடத்தினார் என்ற தகவல் பின்னர் வெளியானது. இந்நிலையில் சென்னையில் நடிகர் மோகன்லால் நிருபர்களிடம் கூறும்போது, ‘மம்மூட்டிக்காக நான் சபரிமலையில் பூஜை செய்ததில் என்ன தவறு. இந்த தகவலை திருவிதாங்கூர் தேவசம் போர்டை சேர்ந்தவர்கள் தான் வெளியிட்டனர்’ என்று கூறினார். இந்த தகவலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மறுத்துள்ளது.

இது குறித்து தேவசம் போர்டு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சபரிமலையில் பூஜை நடத்தும்போது அதற்கான அசல் ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். முகம்மது குட்டி என்ற பெயரில் மோகன்லாலுக்காக பூஜை நடத்திய நபரிடம் அசல் ரசீது கொடுக்கப்பட்டது. அந்த ரசீது தான் பத்திரிகைகளில் வெளியானது. தேவசம் போர்டை சேர்ந்த யாரும் இந்த ரசீதை வெளியிடவில்லை. மோகன்லால் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளார். அவர் உண்மையை புரிந்து கொண்டு தனது நிலைப்பாட்டை திருத்தி கொள்வார் என்று கருதுகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: