சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்துக்கு ‘சூர்யா-45’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. ஹீரோயினாக திரிஷா, முக்கிய வேடத்தில் ‘லப்பர் பந்து’ சுவாசிகா நடிக்கின்றனர். இப்படத்துக்காக சூர்யா, திரிஷா பங்கேற்கும் ஒரு பாடல் காட்சிக்காக, பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டான திருவிழா அரங்குகள் அமைக்கப்படுகின்றன. சூர்யா, திரிஷா ஆகியோருடன் 500க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் நடனம் ஆடுகின்றனர்.
சென்னையில் அருண் வெஞ்சரமூடு வடிவமைப்பில் அரங்குகள் உருவாகி வருகின்றன. முன்னதாக சூர்யாவும், திரிஷாவும் ’மௌனம் பேசியதே’, ’ஆறு’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற இந்த ஜோடி, மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’, ‘சுல்தான்’ ஆகிய பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘சூர்யா-45’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது. காமெடி கலந்த முழுநீள ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தை ஆர்ஜே பாலாஜி எழுதி இயக்குகிறார்.