தலைமை மருத்துவன் தன்வந்திரி பகவான்

உலக மக்களை காக்க வேண்டி மஹா விஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று அழைத்து மகிழ்கின்றோம். அவை மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி என தசாவதாரங்களாகும். தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார். தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீவிஷ்ணு புராணம் மற்றும் பிரமாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன.

திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.

அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். நோய் தீர வழிபடலாம் நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும். அல்லவா? இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்.

மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர் ஸ்ரீதன்வந்திரி பகவான், அவரே ஸ்ரீமன் நாராயணன். அப்பேற்பட்ட தன்வந்திரி பகவானுக்கு வாலாஜாபேட்டை அனந்தலை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைந்துள்ளது.

இங்கு வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தருகின்றார். இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் எனும் இக்கோயில் வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Related Stories: