சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் ட்ராமா வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். நீலம் ஸ்டுடியோ, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளன.
பைசன் படத்தில் கூடுதலாக கலையரசன், பசுபதி, லால், அழகம் பெருமாள் மற்றும் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி திரு படத்தொகுப்பு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மற்றும் சென்னையில் ‘பைசன்’ படப்பிடிப்பு நடந்துள்ளது. இதுவரை சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள மாரி செல்வராஜ், முதன்முறையாக ‘டக்கர்’, ‘தேவராட்டம்’, ‘சேதுபதி’ படங்களுக்கு இசையமைத்த நிவாஸ் கே. பிரசன்னாவுடன் இணைந்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ‘ஆதித்ய வர்மா’, ‘மகான்’ படங்களுக்குப் பிறகு துருவ் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
