அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

277. ப்ரகாசாத்மனே நமஹ: (Prakaashaathmaney namaha)

(‘நைகரூப’ என்ற 272-வது திருநாமம் தொடங்கி, ‘ப்ரதாபன’ என்ற 278-வது திருநாமம் வரையில் உள்ள 7 திருநாமங்கள், திருமாலுடைய விஸ்வரூபத்தின் பெருமையை சொல்கின்றன)

பாண்டவ தூதனாக கௌரவ சபைக்கு வந்து பாண்டவர்கள் பக்கத்து நியாயத்தை எடுத்துக் கூறினான் கண்ணன். அன்று இரவு, கர்ணனோடும் தனது மற்ற நண்பர்களோடும் ரகசிய விவாதம் நடத்திய துரியோதனன், “நண்பர்களே! இன்று சபையில் பாண்டவர்களை ஆதரித்துக் கண்ணன் பேசியதை பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட எல்லோரும் ஆதரித்து விட்டார்கள் பார்த்தீர்களா? நாளை சபையில் என் தாயான காந்தாரியை அழைத்து எனக்கு அறிவுரை கூறத் திட்டமிட்டுள்ளார்கள். இது இப்படியே தொடர்ந்தால், பீஷ்மரும் துரோணரும் கண்ணனோடு இணைந்து என்னை சிறைப்பிடிக்கவும் வாய்ப்புண்டு. எனவே அவர்கள் என்னை சிறைப்பிடிப்பதற்கு முன் நாம் நாளை கண்ணனை சிறைப்பிடித்துவிட வேண்டும்!” என்று கூறினான்.

அடுத்த நாள் காலை சபைக்கு வந்த கண்ணன், திருதராஷ்டிரனைப் பார்த்து, “அரசே! நான் நினைத்தால் இந்த துரியோதனனை ஒரு நொடியில் சிறைப்பிடித்துப் பாண்டவர்களிடம் ஒப்படைப்பேன். மன்னராகிய உங்களுக்கு மரியாதை கொடுத்து அதைச் செய்யாமல் இவனை விட்டு வைத்துள்ளேன்! எனவே பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைத் தந்து விடுங்கள்!” என்றான்.

அப்போது துரியோதனன், “கண்ணா! என் இடத்துக்கு வந்து நீ என்னைச் சிறைப்பிடிக்கப் போகிறாயா? இப்போது நான் உன்னைச் சிறைப்பிடிக்கிறேன் பார்!” என்றான். “ஓ மூடனே! என்னைத் தனி ஆள் என்று நினைத்துச் சிறைப் பிடிக்க முற்பட்டாயோ?” என்று துரியோதனனைப் பார்த்துச் சொன்ன கண்ணன், அங்கேயே அப்போதே விஸ்வரூபம் எடுத்தான்.

வானில் மின்னல் தோன்றுவது போல், அந்த விஸ்வரூபத் திருமேனியில் இருந்து தேவர்கள் யாவரும் தோன்றினார்கள். அவனது நெற்றியில் பிரம்மா, முகத்தில் அக்னி, மார்பில் உருத்திரன், தோள்களில் லோகபாலகர்கள், இரு கரங்களில் பலராமனும், அர்ஜுனனும், முதுகில் மற்ற நான்கு பாண்டவர்கள் என உலகில் உள்ள அனைத்தும் கண்ணனின் விஸ்வரூபத்துக்குள் இருந்தன. அவனது கண்கள், காதுகள் மற்றும் மூக்கு துவாரங்களில் இருந்து தீச்சுடர் வெளிவந்தது. சூரியனைப் போல அவனது திருமேனி ஒளிவீசியது.

அவ்வொளியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கௌரவ சபையில் உள்ள அனைவரும் கண்களை மூடிக் கொண்டார்கள். பீஷ்மர், துரோணர், விதுரர், சஞ்ஜயன் ஆகிய நால்வருக்கு மட்டுமே அவ்வொளியைப் பொறுத்துக் கொண்டு விஸ்வரூபத்தைக் கண்டு களிக்கும் பாக்கியம் கிட்டியது.

அப்போது குருடனான திருதராஷ்டிரனுக்குத் திவ்யமான பார்வையைக் கண்ணன் அருளவே, அவனும் ஒளிமிக்க அந்த விஸ்வரூபத்தைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றான். அந்த அரிய வடிவைக் கண்ட பரவசத்தில்,

“த்வமேவ புண்டரீகாக்ஷ ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு:

தஸ்மாத் தே யாதவச்ரேஷ்ட ப்ரஸாதம் கர்தும் அர்ஹஸி”

என்று கண்ணனைத் துதித்தான் திருதராஷ்டிரன். “அனைத்துலகுக்கும் இறைவனாகிய தாமரைக் கண்ணனே! நீ தான் அடியேனிடத்தில் கருணை புரிந்தருள வேண்டும்!” என்று வேண்டினான்.

“உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று திருதராஷ்டிரனிடம் கண்ணன் கேட்க, திருதராஷ்டிரனோ, “இந்த ஒளி வடிவையே தரிசித்து விட்டேனே! இதற்கு மேல் எனக்கு வேறென்ன வரம் வேண்டும்? உன்னைக் கண்ட பின் இனி வேறொன்றைக் காண எனக்கு விருப்பமில்லை. அதனால் நீ தந்த பார்வையை நீயே பறித்து விடு! இவ்வுலகில் உள்ள தாழ்ந்த விஷயங்களை இனி நான் காண விரும்பவில்லை!” என்று பிரார்த்தனை செய்தான். கண்ணனும் அவ்வாறே தான் கொடுத்த பார்வையைத் திருதராஷ்டிரனிட மிருந்து பறித்தான்.

துரியோதனனின் தீய செயல்களுக்கெல்லாம் துணைபோன திருதராஷ்டிரன், பெரிய பக்திமான் போல் இவ்வாறு பேசுகிறானே! அவனுக்குத் திடீரென இம்மாற்றம் எவ்வாறு உண்டானது? விஸ்வரூபம் எடுத்த கண்ணனின் திருமேனி ஒளி, திருதராஷ்டிரன் மீது பட்ட மாத்திரத்தில் அவனது மனதில் உள்ள அழுக்குகள் யாவும் நீங்கியபடியால், இத்தகைய உயர்ந்த வார்த்தைகள் அவனது நாவிலிருந்து உதித்தன.

‘ப்ரகாசம்’ என்றால் ஒளி. ‘ப்ரகாசாத்மா’

என்றால் ஒளிமிக்கவர் என்று பொருள். திருதராஷ்டிரன் போன்ற மூடர்கள் கூட ஏற்றுக் கொண்டு, மனம் திருந்தி, துதி செய்யும் படியான பிரகாசம் கொண்டவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘ப்ரகாசாத்மா’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 277-வது திருநாமம்.

“ப்ரகாசாத்மனே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் ஞானக் கண்களுக்குத் திருமால் ஒளிதருவார்.

278. ப்ரதாபனாய நமஹ: (Prathaapanaaya namaha)

திருமாலின் திருக்கரத்தை அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வாருக்கு என்று பிரத்தியேகமாகத் திருக்கோயில் உள்ள ஒரே திருத்தலம்

கும்பகோணம் ஆகும். அங்கே விஜயவல்லி மற்றும் சுதர்சனவல்லியோடு சக்கர ராஜன் நமக்குக் காட்சி அளிக்கிறார். அந்தத் திருக்கோயில் தான் ‘குடந்தை சக்கரபாணி கோயில்’ என்று பிரசித்தமாக அழைக்கப்படுகிறது.

அந்த சக்கரத்தாழ்வாரைக் குறித்து ‘ஹேதி புங்கவ ஸ்தவம்’ என்னும் துதியை, நடாதூர் அம்மாள் என்னும் மகான் குடந்தையில் வாழ்ந்த காலத்தில் இயற்றினார். வரலாற்றில் சக்கரத்தாழ்வாருக்கு என்று எழுந்த முதல் துதி அதுவே ஆகும். அந்த துதியின் முதல் அடியில்,

“ஜய! ஹேதீச! லக்ஷ்மீச பாஹு அலங்கார பூத!”

என்று சக்கரத்தாழ்வாரைத் துதித்தார்.இதன் பொருள் யாதெனில், “ஆயுதங்களின் தலைவரே! திருமாலின் திருக்கரத்துக்கு ஓர் அணிகலனாக இருப்பவரே! உமக்கு வெற்றி உண்டாகட்டும்!” என்பதாகும். இவ்வாறு இவர் இயற்றிய அளவில், அருகில் இருந்த ஒரு நண்பர், நடாதூர் அம்மாளிடம், “சுவாமி! திருமாலின் திருக்கரத்தில் ஆயுதமாக அல்லவோ சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார்? அவரை ஆபரணம் என்று நீங்கள் துதிக்கிறீர்களே! இது எப்படிப் பொருந்தும்?” என்று வினவினார்.

அதற்கு மிக அழகான ஓர் உதாரணத்தைச் சொல்லி நடாதூர் அம்மாள் விளக்கம் அளித்தார்.

“அர்ஜுனனுக்குக் கண்ணன் விஸ்வரூபத்தைக் காட்டிய அளவில், அவ்வடிவத்தைத் தரிசித்த பரவசத்தில், மயிர்க்கால்கள் அனைத்தும் எழுந்து நின்ற நிலையில், கைகளைக் கூப்பிக் கொண்டு விஸ்வரூப பகவானை விழுந்து நமஸ்கரித்துத் துதி செய்தான் அர்ஜுனன். அவனுக்கு வியப்பை அளிக்க வல்லதாக இருந்த அதே விஸ்வரூபம், கௌரவர்களை எல்லாம் சுட்டெரிக்க வல்ல சூரியனைப் போல் திகழ்ந்ததாம். அதனால் தான் வியாசரும் மகாபாரதத்தில்,

“பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ:”

விஸ்வரூபம் கொண்ட விஷ்ணுவினுடைய அந்த ஒளியானது அனைவரையும் சுட்டெரித்தது என்று குறிப்பிடுகிறார்.

ஒரே விஸ்வரூபம் அர்ஜுனனின் கண்களுக்கு விரும்பத் தக்கதாகவும், கௌரவர்களின் பார்வைக்கோ சுட்டெரிப்பதாகவும் இருக்க என்ன காரணம்? அவரவரின் பார்வையும் மனோபாவமுமே காரணம். பக்தி உடைய நல்லவர்களின் கண்களுக்கு அந்த விஸ்வரூபம் இனிதாகத் தெரியும். தீய எண்ணம் கொண்டவர்களின் பார்வைக்கு அது கொடூரமாகத்தான் தெரியும். எனவே இவை அனைத்துமே நமதுமனோபாவத்தைப் பொறுத்தவை.

அதுபோலத்தான் சக்கரத்தாழ்வாரும்! தீயவர்கள், அசுரர்கள் உள்ளிட்டோரின் பார்வைக்கு மட்டுமே ஆயுதம்போல் காட்சி அளிப்பார். பக்தர்களான நம் கண்களுக்கு அவர் என்றுமே அழகிய ஆபரணமாகவே காட்சி தருகிறார். அதனால்தான் இந்தத் துதியில் அவரை அணிகலன் என்று குறிப்பிட்டேன்!” என்று விளக்கம் தந்தார் நடாதூர் அம்மாள்.

திருப்பாவையில் ஆண்டாளும்,

“திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர்

எம்பாவாய்!”

என்ற பாடலில் கண்ணனின் ஒரு கண்ணைச் சூரியனாகவும், மற்றொரு கண்ணைச் சந்திரனாகவும் உருவகப்படுத்திக் காட்டுகிறாள். சூரியனாக இருக்கும் கண், அசுர சக்திகளை அழிக்கும். சந்திரனாக இருக்கும் கண் அடியார்களுக்குக் குளிர்ந்து அருள்புரியும்.

அடியார்களைக் காத்தல், தீயோரை அழித்தல் ஆகிய இருவேறு குணங்களையும் விஸ்வரூபத்தில் ஒரே சமயத்தில் இறைவன் காட்டியபடியால் தான் அந்த விஸ்வரூபம், துரியோதனன் போன்ற தீயவர்களின் பார்வைக்குக் கொடூரமாகவும், அர்ஜுனன் போன்ற பக்தர்களின் பார்வைக்கு விரும்பத் தக்கதாகவும் இருந்தது.

‘ப்ரதாபன:’ என்றால் சுட்டெரிப்பவர் என்று பொருள். விஸ்வரூப வடிவின் ஒளியால் தீய சக்திகளைத் திருமால் சுட்டெரிப்பதால், அவர் ‘ப்ரதாபன:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 278-வது திருநாமம்.

“ப்ரதாபனாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பாபங்களைத் திருமாலின் திருமேனி ஒளி சுட்டெரிக்கும்.

279. ரித்தாய நமஹ: (Riddhaaya namaha)

பொதுவாக ஒரு பெண்ணை ஒரு மாப்பிள்ளைக்கு மணம் முடித்து வைக்கையில், “மஹாவிஷ்ணுஸ்வரூபாய அஸ்மை வராய” - “திருமாலின் வடிவினராய் இருக்கும் இந்த மாப்பிள்ளைக்கு என் பெண்ணை மணம் முடித்துத் தருகிறேன்!” என்று பெண்ணின் தந்தை சொல்ல வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.

ஏனெனில், ஜீவாத்மாக்கள் எடுத்துக் கொள்ளும் உடல் ஆண் உடலாகவோ  அல்லது பெண் உடலாகவோ இருந்தாலும், அனைத்து ஜீவாத்மாக்களுமே இயற்கையில் பெண் போன்றவர்கள் என்றும், பரமாத்மாவான இறைவனே ஆண் என்றும், ஆணாகிய அந்தப் பரமாத்மாவுக்கு ஜீவாத்மாக்கள் அனைவரும் மனைவிகள் என்றும் ஒரு மரபு உள்ளது. எனவே, ஆணாகிய இறைவனின் ஸ்தானத்தில் இருப்பவராக மாப்பிள்ளையைக் கருதி அவருக்குப் பெண்ணை மணம் முடித்துத் தருமாறு வேதங்கள் விதிக்கின்றன.

எனினும், கும்பகோணத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாச்சியார்கோவில் என்னும் திருத்தலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்த மேதாவி முனிவரோ, “நாம் ஏன் யாரோ ஒரு சாதாரண மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்து, அவரைத் திருமாலின் ஸ்தானத்தில் அமர்த்திப் பெண் கொடுக்க வேண்டும்? நேரடியாக அந்தத் திருமாலையே நமக்கு மருமகனாக ஆக்கிக் கொண்டால் நன்றாக இருக்குமே!” என்று சிந்தித்து, திருமாலே தனக்கு மருமகனாக வரவேண்டும் என்று பிரார்த்தித்து தவம்புரிந்தார்.

அவரது தவத்தைக் கண்டு உகந்த மகாலட்சுமி, திருமாலிடம் சொல்லிக் கொள்ளாமல் வைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு நாச்சியார்கோவிலில் ஒரு வஞ்ஜுள மரத்தின் கீழே அவதாரம் செய்தாள். அவளைக் கண்டெடுத்த மேதாவி முனிவர், வஞ்ஜுள மரத்தின் கீழ் தோன்றிய அவளுக்கு வஞ்ஜுளவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

இந்நிலையில், வைகுண்டத்தில் லட்சுமியைக் காணாமல் திருமாலும், அவரின் திருத்தொண்டர்களும் தேடத் தொடங்கினார்கள். அதிவேகமாகப் பறக்கும் ஆற்றல் பெற்றவராகக் கருடன் விளங்குவதால், பூமிக்குச் சென்று லட்சுமி தேவியைத் தேடும் பொறுப்பைக் கருடனிடம் ஒப்படைத்தார் திருமால். நாச்சியார்கோவிலில் வஞ்ஜுளவல்லி என்னும் பெயரில் லட்சுமி அவதரித்திருப்பதைக் கண்டறிந்த கருடன், திருமாலிடம்

அச்செய்தியைத் தெரிவித்தார்.

திருமகளை மீண்டும் அடைய விழைந்த திருமால், வாசுதேவன், பிரத்தியும்நன், அநிருத்தன், புருஷோத்தமன், சங்கர்ஷணன் ஆகிய ஐந்து பிரம்மச்சாரிகளாக வடிவம் கொண்டு, நாச்சியார்கோவிலில் உள்ள மேதாவி முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றார். அந்த ஐவருக்கும் மேதாவியும் வஞ்ஜுளவல்லியும் விருந்து பரிமாறினார்கள். கை அலம்பும் நேரத்தில், வஞ்ஜுளவல்லியின் கரத்தைப் பற்றி இழுத்தார் வாசுதேவன்.

“அப்பா!” என்று வஞ்ஜுளவல்லி கதற, கோபம் கொண்ட மேதாவி முனிவர் வாசுதேவனுக்குச் சாபம் கொடுக்கப் பார்த்தார். கோபத்துடன் மேதாவி வருவதைக் கண்டு நடுங்கிய வாசுதேவன், தான் திருமால் என்பதை மேதாவிக்குக் காட்டினால் மட்டுமே அவரது சாபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று உணர்ந்தார். எனவே திருமாலுக்குரிய அடையாளங்களாகிய சங்கு சக்கரங்களைக் கையில் பிடித்துக் காட்டினார். அதைக் கண்டவுடன், தனது ஆசையை நிறைவேற்றத் திருமாலே வந்துள்ளார் என்பதை உணர்ந்த மேதாவி முனிவர், வஞ்ஜுளவல்லியை வாசுதேவனுக்கு மணமுடித்துத் தந்தார்.

அப்போது லட்சுமியாக மேதாவி முனிவருக்குக் காட்சியளித்த வஞ்ஜுளவல்லி, “தந்தையே! உங்களது சாபத்துக்குப் பயந்து சங்கு சக்கரத்தைத் தூக்கிப் பிடித்த இவர், என்றும் இந்தத் திருத்தலத்தில் சங்கு சக்கரங்களைத் தூக்கிப் பிடித்தபடி என்னுடன் குடிகொண்டிருப்பார்!” என்று கூறினாள்.

மேதாவியோ, “சாதாரண மனிதனான அடியேனின் சாபம் இறைவனான அவரை என்ன செய்துவிட முடியும்? அவர் எதற்காக என் சாபத்தைக் குறித்து அஞ்ச வேண்டும்?” என்று கேட்டார். வஞ்ஜுளவல்லி, “உண்மைதான்! யாருடைய சாபமும் அவரை எதுவும் செய்யாது. அவர் எப்போதுமே பூரணமானவர். எனினும், தன் பக்தர்களின் வாக்கு பொய்த்துவிடக் கூடாது என்று நினைப்பவர் அவர். அதனால் உங்களது வாக்கை மெய்ப்பிப்பதற்காக நீங்கள் சாபமே கொடுத்தாலும் அவர் ஏற்றுக் கொள்வார்.

அவ்வாறு பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவராய் அவர் இருப்பதால் தான் அவரது குணங்கள் அனைத்தும் முழுமை பெறுகின்றன! அதற்குச் சான்றாக, பக்தரான உங்களது வாக்குக்கு முக்கியத்துவமளித்து அவர் தாங்கிப் பிடித்த சங்கு சக்கரங்களை என்றென்றைக்கும் தாங்கிப் பிடித்த நிலையிலே இத்திருத்தலத்தில் காட்சி தருவார்!” என்று விளக்கினாள்.

அத்தகைய முழுமையான குணங்களோடு நாச்சியார்கோவிலில் திருமால் விளங்குவதால் தான் அவருக்கு ‘நறையூர் நம்பி’ என்று திருப்பெயர் ஏற்பட்டுள்ளது. நம்பி என்றால் அனைத்து குணங்களும் பரிபூரணமாக நிறைந்தவர் என்று பொருள். அவ்வாறு பரிபூரணமாக நிறைந்திருப்பவரை வடமொழியில் ‘ரித்த:’ என்றழைப்பார்கள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 279-வது திருநாமம்.

“ரித்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் பரிபூரணமாக நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

280. ஸ்பஷ்டாக்ஷராய நமஹ: (Spashtaaksharaaya namaha)

வியாச முனிவரின் சீடர்களுக்குள் ஒரு வேதாந்த விவாதம் நடைபெற்று வந்தது. பல்வேறு உபநிஷத்துக்களில் உள்ள வாக்கியங்களை எல்லாம் எடுத்து அவர்கள் அலசி வந்தார்கள். சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் “யஸ்து ஏதமேவம் ப்ராதேச மாத்ரம் அபிவிமானம் ஆத்மானம் வைச்வானரம் உபாஸ்தே” (யார் ஒருவர் வைச்வானரனை வழிபடுகிறாரோ, அவர் முக்தி அடைவார்) என்ற வாக்கியத்தைப் பற்றிய விவாதம் வந்தபோது, இவ்வாக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள வைச்வானரன் யார் என்று வியாசரின் சீடர்கள் விவாதிக்கத்

தொடங்கினார்கள்.

சிலர், “நம் காதைப் பொத்திக் கொள்ளும் போது ‘ஹோ!’ என்ற இரைச்சல் கேட்கிறதல்லவா? அந்த ஒலி நம் வயிற்றில் எரிந்து கொண்டிருக்கும் தீயினால் உண்டாகும் ஒலி என்று சொல்வார்கள். அவ்வாறு வயிற்றில் எரிகின்ற நெருப்புக்கு ‘வைச்வானரன்’ என்று பெயர். அதுதான் நாம் உண்ணும் உணவை எல்லாம் ஜீரணம் செய்கிறது. அந்த வைச்வானரத் தீயைத் தான் வணங்கச் சொல்கிறது உபநிஷத்!” என்று கூறினார்கள்.

வேறு சில சீடர்கள், “இல்லை! இல்லை! நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய ஐம்பூதங்களுள் ஒன்றான நெருப்பைத்தான் இங்கே வைச்வானரன் என்று கூறியுள்ளார்கள். வேள்விகள் வாயிலாக அக்னி வழிபாடு செய்து முக்தி அடையலாம் என்பதே இந்த உபநிஷத் வாக்கியத்தின் தாத்பரியம்!” என்று கூறினார்கள்.

மேலும் சிலர், “இரண்டுமே இல்லை. தேவர்களுள் ஒருவரான அக்னி பகவானுக்கு வைச்வானரன் என்ற பெயர் உண்டு. ரிக் வேதமே அக்னி தேவனை வைச்வானரன் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே அக்னி தேவனை வழிபட்டால் முக்தி பெறலாம் என்பது தான் இந்த உபநிஷத் வாக்கியம் கூறும் கருத்தாகும்!” என்று கூறினார்கள்.

அப்போது, வியாசரின் சீடர்களுள் முக்கியமானவரும், சாம வேதத்தை உலகில் பிரச்சாரம் செய்தவருமான ஜைமினி என்னும் முனிவர், “இதில் இவ்வளவு குழப்பமே வேண்டாம். வைச்வானரன் என்ற சொல் சாட்சாத் திருமாலைத் தான் குறிக்கிறது. வைச்வானரன் என்ற சொல்லுக்கு உணவை ஜீரணிக்கும் அக்னி என்றும், வேள்வித் தீ என்றும், அக்னி தேவன் என்றும் பொருள் இருப்பது உண்மையே. இருப்பினும் இவ்விடத்தில் வைச்வானரன் என்ற சொல், திருமாலைத் தான் சொல்கிறது. பரமாத்மாவான திருமாலை வணங்கினால் முக்தி அடையலாம் என்பதே இந்த உபநிஷத் வாக்கியத்தின்

தாத்பரியமாகும்! (ஸாக்ஷாத் அபி அவிரோத:)” என்றார்.

“வைச்வானரன் என்ற சொல் எப்படி பரமாத்மாவைக் குறிக்கும்?” என்று மற்ற சிஷ்யர்கள் கேட்கையில், அதற்கு ஜைமினி முனிவர், “அக்னி என்ற சொல், வழக்கில் அக்னி தேவனையோ அல்லது தீயையோ குறிப்பதாக நாம் கொள்கிறோம். ஆனால் வடமொழி இலக்கண ரீதியில் அக்னி என்ற சொல்லைப் பிரித்தால், ‘அக்ரம் நயதீதி அக்னி:’ என்று வரும். அதாவது, இருளில் தவிப்பவர்க்கு ஒளிதந்து முன்னே அழைத்துச் செல்பவருக்கு அக்னி என்று பெயர். அறியாமை எனும் இருளில் தவிக்கும் அடியவர்களுக்கு ஒளிவிளக்காய் இருந்து திருமால் வழிகாட்டுவதால், இலக்கண ரீதியில் அக்னி என்ற சொல்திருமாலைக் குறிப்பதாகவே கொள்ளலாம்.

அதுபோலத் தான் வைச்வானரன் என்ற சொல்லை இலக்கண ரீதியில் பிரித்தால், ‘விச்வேஷாம் நராணாம் நேதா இதி வைச்வானர:’ என்று வரும். அதாவது, உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவராக இருந்து அவைகளை வழிநடத்துபவர் என்று பொருள். இவ்வாறு தலைவராக இருந்து வழிநடத்தும் தன்மை வயிற்றிலுள்ள அக்னிக்கோ, வேள்வித் தீக்கோ, அல்லது அக்னி பகவானுக்கோ இல்லை. திருமாலுக்குத் தான் உண்டு. எனவே வைச்வானரன் என்ற சொல் இலக்கண ரீதியில் திருமாலைச் சொல்வதாகவே கொண்டு, அந்தத் திருமாலை வழிபட்டால் முக்தியடையலாம் என்று இந்த உபநிஷத் கூறுவதாகப் பொருள்கொள்வதே சரி!” என்று விளக்கினார்.

அப்போது வியாசர், “ஜைமினி ஓர் அற்புதமான வழியை உலகுக்குக் காட்டியுள்ளார். வைச்வானரன், அக்னி உள்ளிட்ட சொற்கள் மட்டுமல்ல, வேதங்களில் வரும் இந்திரன், வருணன், ருத்ரன் உள்ளிட்ட சொற்களையும் இப்படி இலக்கண ரீதியில் பிரித்து, அவை நேரடியாகப் பரமாத்மாவைக் குறிப்பதாகவே கொள்ளலாம்!” என்றார். மேலும், ஜைமினியைப் பார்த்து, “ஸ்பஷ்டாட்சரன் அக்ஷரங்களை ஸ்பஷ்டமாக்கி விட்டானோ?” என்றாராம் வியாசர்.

‘ஸ்பஷ்டாட்சரன்’ என்று திருமாலை இங்கே வியாசர் குறிப்பிட்டுள்ளார். வேதத்திலுள்ள எழுத்துகளுக்கு ‘அட்சரம்’ என்று பெயர். ‘ஸ்பஷ்டம்’ என்றால் தெளிவு என்று பொருள். திருமாலின் திருவருளாலேயே ஜைமினி இத்தகைய விளக்கம் தந்துள்ளார் என்பதை உணர்ந்த வியாசர், “ஸ்பஷ்டாட்சரன் (திருமால்) அட்சரங்களை (வேத எழுத்துகளை) ஸ்பஷ்டமாக்கி (தெளிவாக்கி) விட்டானோ?” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு வேத எழுத்துகளாகிய அட்சரங்களை அடியார்களுக்கு ஸ்பஷ்டமாக - தெளிவாக விளக்கிக் காட்டுவதால், திருமால் ‘ஸ்பஷ்டாட்சர:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர

நாமத்தின் 280-வது திருநாமம்.

“ஸ்பஷ்டாக்ஷராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வேதங்களின் பொருள் நன்கு விளங்கும்படி திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: