விநாயகர் வழிபாட்டில் விஞ்ஞானம்

இந்துக்களின் கடவுள் வழிபாட்டு முறைகள் அறிவியல் பூர்வமானவை, உடல்நலம், மனநலம், உயிர்நலம் என்பவற்றின் விருத்திக்கு உதவுபவை. அதில் விநாயகர் வழிபாட்டு முறைகளில், தோப்புக்கர்ணம் போடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.தோப்புக்கர்ணம் போடக் காரணம்முன்னொரு காலத்திலே தேவர்களுக்கு தலைவனான இந்திரன், அசுரர்களுக்கு தலைவனான அசுரேந்திரனைப் போரில் வென்றான். அசுரேந்திரன் சுக்கிராச்சாரியாரிடம் தோல்வியுற்றது குறித்து வருந்தினான். அவர் ‘‘வசிட்டர் மரபில் வந்த மாகத முனிவரிடம் ஓர் அசுரகுல கன்னிகையை அனுப்பி வை. அவளுடன், முனிவர் சேரும்பொழுது ஒருவன் தோன்றுவான். அவன், தேவர்களை வெல்வான்’’ என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி அசுரேந்திரன் விபுதை என்ற அசுரகுல கன்னிகையை மாகத முனிவரிடம் அனுப்பினான், அவள் சென்ற சமயம் பார்த்து மாகதமுனிவர் தவஞ் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது ஆண் யானை ஒன்று பெண் யானையோடு புணர்வதைக்கண்டார். அவரும் விரதம் கலைத்து புணர்ச்சிமேல் மனம் வைத்தார். அந்நேரம், விபுதை ‘‘என் மீது அன்புண்டாகும்படி’’ வணங்கி நின்றாள். முனிவர் மகிழ்ச்சியுற்று ‘‘யாமிருவரும் யானையுருவெடுத்துக் கூடி இன்புறவேண்டும் என்றார். விபுதை பெண் யானையாகத் தோன்ற முனிவர் ஆண் யானையாகத் தோன்றி இன்பம்நுகர்ந்தனர். அதன் விளைவாக விபுதை ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள். அவன் யானை முகம் கொண்டு இருந்ததால் கயமுகாசுரன் என அழைக்கப்பட்டான். சுக்கிராச்சாரியார் கயமுகாசுரனை மேரு மலைக்குச் சென்று சிவனை நோக்கித்தவம் செய்யும்படி கூறினார். அதன்படி தவம் செய்த கயமுகாசுரன் முன் சிவபெருமான் தோன்றிப் பல வரங்களைக் கொடுத்து அருளினார்.

பல வரங்களைப் பெற்ற கயமுகா சுரன், இந்திரன் முதலான தேவர்களை வென்று, மதங்கமா புரம் என்னும் நகரத்தை அமைத்து, ஏழுலகிலும் தன் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். மேலும் இந்திரன் முதலான தேவர்களை ‘‘நீங்கள் தினந்தோறும் எம்முன் வரும்பொழுது, உங்கள் கைகளால் சிரசில் மும்முறை குட்டி, கைகளை மாறிக் காதுகளைப் பற்றித் தாழ்ந்தெழுந்து, அதன்பின் நம்பணிகளைச் செய்மின்’’ என்றான். தேவர்கள் அதனை மறுக்கமுடியாமல், அவனுக்கு அஞ்சி, அவன் சொல்லியது போல தலையில் இருகைகளால் கொட்டி, தோப்புக்கரணம் மும்முறை போட்ட பின்னரே கயமுகாசுரன் ஆணையிட்ட பணிகளை செய்து வந்தனர். நாளுக்கு நாள் கயமுகாசுரனுடைய துன்புறுத்தல்கள் அதிகமாக, பொறுக்கமுடியாத இந்திரன் முதலான தேவர்கள் மகாவிஷ்ணுவோடு சேர்ந்து திருக்கைலாச மலைக்கு சென்று சிவபெருமானிடம் கூறினார்கள்.

அவர்களிடம் சிவபெருமான் ‘‘விரைவில் எனது புத்திரன் தோன்றுவான். அவன் கயமுகாசுரனை வெற்றி கொள்ளும்படி அவனை அனுப்புவோம்’’ என்று திருவாய் மலர்ந்து கூறினார். அதன்படி தோன்றிய விநாயகர், கயமுகாசுரனை வென்றார். தேவர்கள் மகிழ்ந்தனர். தங்களுக்கு துன்பம் நீக்கி இன்பம் அருளிய விநாயகருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நாங்கள் கயமுகாசுரனுக்கு அஞ்சி செய்ததை, தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு செய்கிறோம். இவ்வாறு செய்யும் பக்தர்கள் எங்களைப்போன்று துயரம் களைந்து செல்வ வளமும், உடல் நலமும் பெறட்டும். அதற்கு ஆனை முகத்தோனே நீ அருள வேண்டும் என்று பணிந்தனர். விநாயகரும் அவ்வாறே ஆகட்டும் என்று அருளினார். இதனாலே தோப்புக்கர்ணம் விநாயகர் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றது.

தோப்புக்கர்ணம் - விஞ்ஞான விளக்கம்

தோப்புக்கர்ணம் போடும்போதும், நமது காது மடல்களை இறுகப் பற்றிப்பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களின் அடிப்பாகத்தில், உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரு தூண்டுதல் கிடைக்கிறது. இருந்து அல்லது தாழ்ந்து எழும்போது, காலில் உள்ள ‘‘சோலியஸ்’’ எனும் தசை, இயங்கத் தொடங்குகிறது. சோலியஸ் தசையால், உடல் முழுவதும் குருதி ஓட்டம் சீராகின்றது. இதயத்தின் தசைகளைப் போன்றே, இது தொழிற்படுகிறது. இதன்மூலம், நமது தண்டுவடத்தின் அடியிலே அமைந்துள்ள மூலாதாரத்தில், சக்தி உருவாகும் நிலை ஏற்படுகிறது. யோகப்பயிற்சியிலும் மூலாதாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்கா, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரைச்சேர்ந்த உடற்கூற்று நிபுணர், எரிச் ராபின்ஸ் என்பவரின் ஆய்வின்படி, தோப்புக்கர்ணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக்கலங்கள் சக்தி பெறுகின்றன என ஆய்வில் கண்டறிந்தார். பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற, பின் தங்கிய மாணவர்கள், தோப்புக்கர்ணப் பயிற்சியின் பின் அதிக மதிப்பெண்களைப் பெற்றதாகக் கூறுகிறார். நமது வழக்கப்படி, மாணவர்கள், பரீட்சை எழுதச் செல்வதற்கு முன்னர், விநாயகப் பெருமானைத் தரிசிக்கச் சென்று, தோப்புக்கர்ணம் போடுவதும். அவ்வாறு செய்யுமாறு பெற்றோரும், ஆசிரியர்களும் அறிவுரை கூறுவதும், ஏன் என்பதற்கான காரணம், வெறுமனே ஒரு சம்பிரதாயம் அல்ல. அறிவுபூர்வமானதும், அறிவியல் பூர்வமானதும்கூட, என்பதை அறியும்போது நமது வழிபாடுகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை.

யேல் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நரம்பியல் நிபுணர், யூஜினியஸ் அங், என்பவர், இடது கையால் தோப்புக்கரணம் போடுவதால், அக்கு பஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன், மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாக ஆய்வுமுலம் கண்டுபிடித்துள்ளார். தோப்புக்கர்ணம், உலக நாடுகளில் ‘‘சூப்பர் பிரெய்ன் யோகா’’, என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நம் ஆன்றோர், தினசரி விநாயகர் வழிபாட்டின், முதல் அங்கமாக இதை விதித்துள்ளனர். விநாயகப்பெருமானின் அருளையும், அனுக்கிரகத்தையும் பெறுவதோடு, உடல் நலத்தையும், மனநலத்தையும் பேணுவதற்கு தோப்புக்கர்ணம் போடுவோம் பிள்ளையாருக்கு....

சு. இளம் கலைமாறன்

Related Stories: