திருவாரூர் பொன்னை கொடுத்த தீர்த்தம்

வைகுண்டவாசனான திருமால் ஈசன், பார்வதி, குமரக் கடவுள் மூவரையும் ஒரே ஆசனத்தில் இருத்தி சோமாஸ்கந்த மூர்த்தி என்றழைக்கப்படும் உருவில் வழிபட்டு வந்தார். அந்த சோமாஸ்கந்தரை, திருமாலிட மிருந்து தேவேந்திரன் விரும்பிப் பெற்றான். அந்த மூர்த்திக்கு தியாகராஜப் பெருமான் என்று பெயரிட்டு பூஜைகள் செய்து வந்தான். இந்நிலையில், தேவேந்திரனுக்கு அடிக்கடி அசுரர்களால் இன்னல்கள் வந்து கொண்டே இருந்தன. இதன் தொடர்ச்சியாக வலன் என்ற அசுரனுடன் போர் செய்தபோது, இந்திரனுக்குத் துணைபுரிந்தான் முசுகுந்தன் என்ற சோழமன்னன். இந்திரனுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தான். இதற்குப் பரிசாக இந்திரன் என்ன வேண்டு மென்று கேட்க, முசுகுந்தனுக்கோ இந்திரன் வழிபட்டு வந்த தியாகராஜப் பெருமானைத் தானும் பூஜிக்க வேண்டுமென ஆவல் உண்டானதால் அதையே கொடுக்கும்படி கேட்டான்.

தியாகராஜரை கொடுக்க மனமில்லாத இந்திரன், மூல உருவத்தைப் போலவே வேறு ஆறு உருவங்களைச் செய்து ஒன்றுக்கொன்று வித்தியாசம் தெரியாத வகையில் அமைத்தான். முசுகுந்தனோ ஈசனின் அருளால் மூல உருவத்தை அடையாளம் கண்டான். அதுமட்டுமல்லாது மற்ற ஆறு உருவங்களையும் கூடுதல் பரிசாகப் பெற்று பூலோகம் வந்தான். இந்திரன் வழிபட்ட தியாகராஜரை ‘ஆரூரா... தியாகேசா’ என மகிழ்ச்சியுடன் போற்றி வழிபடத் தொடங்கினான். தியாகராஜருக்கு வீதிவிடங்கன், தியாகர், விநோதர், அஜபா நடேசப் பெருமான் முதலான நூற்றியெட்டுத் திருப்பெயர்கள் உண்டு. இவரை சாயரட்சை என்று சொல்லப்படும் அந்திவேளையில் தரிசிப்பது இத்தலத்தின் பெரும் சிறப்புகளில் ஒன்று. மற்ற ஆறு தியாகராஜர் உருவங்கள் திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருக்காரவாசல், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் என்னும் தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏழு தலங்களையும் சப்தவிடங்க தலங்கள் என்று அழைப்பர்.

திருவாரூர் கோயிலைப் பூங்கோயில் என்று அழைப்பர். இங்குதான் சுந்தரர் திருத்தொண்டத் தொகை எனும் அற்புத பாடல்களை இயற்றினார். இந்தக் கோயிலுக்கு மூன்று பிராகாரங்கள். இங்கு மூலவருக்கு இணையான தொன்மையும், புகழும் பெற்றவராக தியாகேசர் விளங்குகிறார். இவரே இந்திரன் வழிபட்ட இறைவன் ஆவார். தியாகராஜர் சந்நதிக்கும் வன்மீகநாதர் சந்நதிக்கும் இடையில் ஐங்கலக்காசு விநாயகர் அமைந்துள்ளார். அழகிய சோழன் ஒருவர் ஐந்து கலம் பொற்காசுகளைகொண்டு இவரை வடித்ததாக வரலாறு கூறுகிறது. இரண்டாம் பிராகாரத்தில் தெற்குமுகமாக நீலோத்பலாம்பிகை எனும் அல்லியங்கோதை. கையில் பூச்செண்டு ஒன்றைத் தாங்கி நிற்கிறாள். இந்த அல்லியங்கோதையின் பக்கத்தில் தோழி ஒருத்தி தன் தோள்மீது முருகனைத் தாங்கி நிற்பதும், அம்மை தனது இடக்கரத்தால் முருகனின் சுட்டுவிரலைப் பிடித்திருப்பதும் காணவேண்டிய அபூர்வ காட்சியாகும்.

மூன்றாவது பிராகாரத்தின் வடமேற்கு திசையில் தனிக்கோயிலில் ஞானசக்தி பீடமாக கமலாம்பிகை தவக்கோலத்தில் காட்சி தருகின்றாள். இத்தலத்தில் இருபத்தைந்து தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இதில் பிரதானமாக விளங்குவது கமலாலயம் எனும் திருக்குளமாகும். இக்குளத்தின் கரையில் மாற்றுரைத்த பிள்ளையார் சந்நதி அமைந்துள்ளது. சுந்தரர், விருத்தாசலம் மணிமுத்தாறில் இட்ட பொன்னை, திருவாரூர் கமலாலயத்தில் இறைவன் எடுத்துக் கொடுத்தபோது இந்தப் பொன்னின் மாற்றை (தரத்தை) உறைத்துச் சரிபார்த்தவர் இந்தப் பிள்ளையாரே ஆவார்.

- பனையபுரம் அதியமான்

படம்: சங்கரலிங்கம்

Related Stories: