தேவநல்லூர் சோமநாத சுவாமி சமேத கோமதி அம்பாள் கோயில்

நெல்லை மாவட்டம், களக்காட்டில் இருந்து சிங்கிகுளம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் கீழ தேவநல்லூரில் பச்சையாற்றின் கரையில் இயற்கை எழிலுடன் சோமநாத சுவாமி சமேத கோமதி அம்பாள் கோயில் உள்ளது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில் தனித்துவமிக்கதாகும். முற்காலத்தில் வேட்டையாட இப்பகுதிக்கு வந்த மன்னர் ஒருவர், இங்குள்ள இலந்தை மரத்தின் அடியில் முயல் பதுங்கியிருப்பதை கண்டு அதை பிடிக்கும்பொருட்டு மரத்தை வெட்டுமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் காவலர்கள் மரத்தை வெட்டத் துவங்கியதும், மரத்தில் இருந்து ரத்தம் கொப்பளித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மன்னர் பிறப்பித்த உத்தரவை அடுத்து மரத்தின் கீழ் மண்னை தோண்டியதும், மண்ணுக்குள் இருந்து சிவலிங்கம் வெளிபட்டது.

 அதைப்பார்த்து மெய்சிலித்த மன்னர், அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, எம்பெருமானுக்கு காண்போர் வியக்கும் வண்ணம் இக்கோயிலை கட்டியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சிவலிங்கம் புதைந்திருந்த இலந்தை மரமே கோயிலின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது. தற்போது அம்மரத்தடியில் சாஸ்தா எழுந்தருளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சிவ ஸ்தலமாகவும், பச்சையாற்றின் கரையில் உள்ள பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழும் இக்கோயிலில் சுவாமி, அம்பாளை ஒரே இடத்தில் நின்று தரிசிக்க ஏதுவாக இக்கோயில் நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும்  ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை தீபம், திருக்கல்யாண வைபவம், திருவாசகம் முற்றோதுதல், பிரதோஷம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு  தினமும் காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை,  காலை 8 மணிக்கு காலசந்தி, முற்பகல் 10 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு அர்த்த சாம பூஜை நடந்து வருகிறது. களக்காட்டில் இருந்து சிங்கிகுளம்  வழியாக நெல்லைக்கு செல்லும் பஸ்கள் கீழதேவநல்லூரில் நின்றுசெல்கின்றன.

Related Stories: