திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயில் மாசித்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோயிலை வந்தடைந்தார். தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் நாளான நேற்று (18ம்தேதி) காலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோயிலை வந்துசேர்ந்தனர்.

இரவு 8 மணிக்கு சிவன் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள்  எழுந்தருளி 9ம் திருவிழா மண்டபத்தை வந்தடைந்ததும் பலவகையான அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையானது. பின்னர் சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளியதும் எட்டு வீதிகளிலும் உலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (19ம் தேதி) காலை நடக்கிறது. காலை 6.30 மணிக்கு மேல் விநாயகர் தேரும் அதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேர்கள் ரத வீதிகளில் உலா வருதலும் நடைபெறும். 11ம் திருவிழாவான நாளை (20ம் தேதி) இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. திருவிழா தொடர்ந்து 21ம் தேதி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: