சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பத்திரிகை செய்தியில், நடிகர்கள் தொடர்பான பொதுத் தீர்மானம் மற்றும் தனுஷ் குறித்த தனித் தீர்மானம் தொடர்பான தகவல் எங்களுக்கு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து தனுஷ் மீது இதுநாள்வரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பதையும் அவர்மீது எந்தவித புகாரும் நிலுவையில் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டிய நடைமுறை சிக்கல்களுக்கு, எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றி, அதை பத்திரிகை செய்தியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக, படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது. அனைத்து தரப்பு திரைத் தொழிலாளிகளையும் பாதிக்கும் இந்த தன்னிச்சையான அவசர தீர்மானத்தை உடனடியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப பெறவேண்டும். பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட மற்ற தீர்மானங்களையும் மறுபரிசீலனை செய்து, நட்புறவு பாதிக்காமல் சுமூகமான தீர்வு காண தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வரும் என எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.
The post நடிகர் சங்கம் எதிர்ப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.