திருமண தடை நீக்கும் திருவேதிகுடி வேதபுரீஸ்வரர்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 5 கி.மீ தொலைவில்  திருவேதிகுடியில் எழுந்தருளியுள்ளது பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் . மூலவர் வேதபுரீஸ்வரர். அம்பாள் மங்கையர்க்கரசி. தலத்தின் தீர்த்தம் வேத தீர்த்தம். தலவிருட்சம் வில்வமரம். வாழை மடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் சுவாமிக்கு வாழைமடுநாதர் என்ற பெயரும் உண்டு.

தல வரலாறு

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை மகாவிஷ்ணு மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை நோக்கி இத்தலத்தில் தவமிருந்தன. சிவனும் வேதங்களை புனிதப்படுத்தினார். வேதங்களின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் சிவபெருமான் வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார்.  எனவே அந்த தலத்துக்கும்  திருவேதக்குடி என்ற பெயர் ஏற்பட்டு பின்பு வேதிக்குடியானது. வேதங்களை மீட்டுக் கொடுத்த சிவபெருமானை இத்தலத்தில் பிரம்மாவும் பூஜித்துள்ளார். திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் நான்காவதாக போற்றப்படுகிறது.

கோயில் அமைப்பு

 

கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காணப்படுகிறது. ஆலயத்திற்கு வெளியே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ராஜ கோபுரத்தை அடுத்து  மகாமண்டபம், அங்கு நடராஜர் சபையும் இருக்கிறது. உள் பிரகாரத்தில் வேதம் கேட்கச் சாய்ந்திருக்கும் நிலையில்  செவிசாய்ந்த விநாயகர், 108 சிவலிங்கங்கள் உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் அம்பாள் மங்கையர்க்கரசி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அருகே வசந்த மண்டபம் உள்ளது.  தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் மஹாலக்ஷ்மி சன்னதிகள் உள்ளது.  கோயிலில் சப்தஸ்தான தல லிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

தல பெருமை

இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர்.   பிரம்மன் பூஜித்த தட்சிணாமூர்த்தியை  வழிபட்டால் கல்வி ஞானங்களில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரைக் கணலாம்.

சூரிய பூஜை

ஆண்டுதோறும் பங்குனி மாதம்  13, 14, 15 தேதிகளில் இக்கோயிலில் சூரியனுடைய கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. சூரியன் ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். இதனை காண மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் பெருமளவு இங்கு வருவார்கள். சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழாவும் இங்கு சிறப்பு பெற்றது. இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். திருமணத்தில் தடை உள்ளவர்கள் வேதபுரீசர், அம்பாளை  வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை  காலை, மாலை  படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இப்படி தடை நீங்கி திருமணம் நடைபெற்ற தம்பதியர் சமேதராக காலம் காலமாக இத்தலத்திற்கு வந்து வேதபுரீசருக்கு நன்றி தெரிவித்து பூஜைகள் செய்து வருகிறார்கள்.

Related Stories: