நலங்கள் நல்கும் நரஹரி

சென்னை - ராமாபுரம்

Advertising
Advertising

சுமார் 800 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட லட்சுமி நரசிம்மர் ஆலயம், சென்னை ராமாபுரத்தில் உள்ளது. நொடியிலே தோன்றி, நொடியிலே இரண்யனை வதைத்து, நொடியிலே மறைந்த மூர்த்தி, நரசிம்மர். கிருஷ்ணதேவராயரால் விரும்பி வழிபட்டப்பட்ட இந்த லட்சுமி நரசிம்மன், தன் மடியின் இடது பக்கத்தில் மகாலட்சுமியை அமர வைத்து அழகே உருவாய் அருள்கிறார். ஆலய முகப்பு இரண்டு நிலை கோபுரத்துடன் திகழ்கிறது. முகப்பு மண்டபம் திருமாலின் பல்வேறு அவதார லீலைகளை விளக்கும் சுதைச் சிற்பங்களோடும், பன்னிரு ஆழ்வார்களின் சிற்பங்களோடும் அற்புதமாக விளங்குகிறது. அதில் குறிப்பாக 12 ராசிகளைக் குறிக்கும் சின்னங்களுக்கு நடுவில் நரசிம்மமூர்த்தி அருளும் சித்திரம் மனதைக் கவர்கிறது.

நாள்கள், கோள்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தம்மை அண்டியவர்களைக் காக்கும் நரசிம்மனின் அருட்கொடை புரிகிறது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலில் நரசிம்ம மூர்த்தியின் திருப்பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தில் பலிபீடம், கொடிமரம், கருடாழ்வாரோடு, தும்பிக்கை ஆழ்வாரும், ஆதிசேஷனும் கோயில் கொண்டுள்ளனர். பக்கத்திற்கு நான்கு லட்சுமிகளாக இரு பக்கங்களிலும் அஷ்டலட்சுமிகளின் சுதை வடிவங்களை தரிசிக்கலாம். கருவறையில், இடது புறம் அமிர்தவல்லித் தாயார் அற்புத தரிசனமளிக்கிறார். மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி கீழ் இரு கரங்களில் அபய&வரதம் தாங்கி அருளே வடிவாய், பேரழகுப் பெட்டகமாய் தாயார் திகழ்கிறார். அவர் திருமுன் உற்சவ தாயார்.

கருவறை விமானம், ஆனந்த விமானம் என போற்றப்படுகிறது. வைகானஸ ஆகம விதிப்படி இந்த ஆலயத்தில் பூஜைமுறைகள் நடைபெறுகின்றன. தல தீர்த்தத்துக்கு அமிர்த புஷ்கரணி தீர்த்தம் என்று பெயர். வலது புறம் பக்த காரிய சித்தி ஆஞ்சநேயர் அருள்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு தாங்கள் நினைத்த காரியம் கைகூட வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டு, மட்டைத் தேங்காயை பக்தர்கள் கட்டுகின்றனர். அவர்கள் நினைத்த காரியம் 30 நாட்களுக்குள் நிறைவேறுகிறது. பின் அவர்கள் ஆலயம் வந்து தாங்கள் கட்டிய தேங்காயின் மட்டையை உரித்து, அனுமாரை சுற்றி சூறைத் தேங்காயாக விடுகின்றனர். கருவறையில், பிரகலாதனைக் காத்த நரசிம்மமூர்த்தி தன் மடியின் இடது பக்கத்தில் மகாலட்சுமியை அமர்த்தி, அணைத்த நிலையில் சங்கு, சக்கரம், அபயம் தாங்கி அருள்கிறார்.

அதே போன்று இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சந்தான கிருஷ்ணரின் உற்வசத் திருமேனியை மழலை வரம் வேண்டும் தம்பதியர் தங்கள் கையில் ஏந்திக் கொள்கிறார்கள். சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து முடிக்கும்வரை கையிலேயே சுமந்தால், விரைவில் மனைவி கரு சுமக்கும் காலமும் வருகிறது என்கிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தின்போது இந்த கண்ணனை ஊஞ்சலில் அழகாக அலங்கரித்து வைத்து வழிபாடுகள் மேற்கொள்கிறார்கள். ராமாபுரம், திருவள்ளுவர்சாலை, கங்கையம்மன் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இந்த ஆலயம் உள்ளது. கிண்டி-பூந்தமல்லி மார்க்கத்தில் முகலிவாக்கம் எஸ் அண்ட் எஸ் கம்பெனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும், வடபழநி&பூந்தமல்லி மார்க்கத்தில் வளசரவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும் இத்தலத்தை அடையலாம். இக்கோயில் பற்றி தகவல் அறிய அலைபேசி எண்:  9383337123.

ந.பரணிகுமார்

Related Stories: