50 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயில் தேர் சேதமடைந்து பல ஆண்டுகாலமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள், பக்தர்களின் பங்களிப்புடன் புதிய தேர் செய்யப்பட்டு கடந்த வாரம் வெள்ளோட்டம் விடப்பட்டது. தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு பிறகு புதிய திருத்தேர் மஹோற்சவ விழா நேற்று காலை நடைபெற்றது. நேற்று காலை மணி குருக்கள் வகையறா, பிச்சமணிவகையறா ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளுக்கு பிறகு புதிய தேரில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் உடன் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை தொகுதி குமரகுரு எம்எல்ஏ  வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.

பின்னர் கோயிலை சுற்றி தேரோடும் வீதிகள் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது. இதில் எலவனாசூர்கோட்டை மற்றும் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று வழிபட்டனர். உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பாலசந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  விழாவில், கணையார் விஜயகுமார், எலவனாசூர்கோட்டை ராஜேந்திரன், ராமதாஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயாஜெகன், கலியமூர்த்தி, கோவிந்தசாமி, மணவாளன், செல்வம், புவனசுந்தரசரவணன், ரமேஷ்குமார், பிரகாஷ், திலீப், நந்தகுமார், நேருமதுரைமுத்து, திருமால், இளமுருகன், பழனி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டும், 22ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் மற்றும் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

Related Stories: