பார் புகழும் பழநியில் பங்குனி தேரோட்டம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பழநி: பழநியில் இன்று நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நேற்றிரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முதன்மை திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவிரியாற்றில் தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 15ம் தேதி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு நடந்தது. வள்ளி  தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமிக்கு 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை மாற்றுதல், அப்பளம் உடைத்தல் போன்ற திருமண சடங்குகள் நடந்தன. இதன்பின், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வள்ளி  தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி சன்னதி வீதி, கிரிவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

முத்திரை நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடக்கிறது. அதிகாலை 4.30 மணிக்கு முத்துகுமாரசுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், 6 மணிக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11 மணிக்கு மேல் தேர் ஏற்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு கிரிவீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை காண 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பழநி நகரில் குவிந்துள்ளனர். பக்தர்கள் தீர்த்தக்காவடியுடன், அரோகரா கோஷத்துடன் ஆடியபடியே கோயிலுக்கு செல்லும் காட்சி காண்போரை பரவசம் அடைய செய்தது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் யானைப்பாதையையும், கீழிறங்கும் பக்தர்கள் படிவழிப்பாதையையும் பயன்படுத்தும் வகையில் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், சித்தனாதன் சன்ஸ் எஸ்ஜி.தனசேகர், எஸ்ஜி.பழனிவேல், எஸ்என்.செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: