குலதெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடு : நெல்லை, தூத்துக்குடியில் பங்குனி உத்திர விழா கோலாகலம்

நெல்லை: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சாஸ்தா கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். தமிழ் மாதத்தின் கடைசி மாதம் பங்குனி மாதமாகும். இந்த மாதத்தில் தான் தெய்வீக திருமணங்கள் நடந்துள்ளன. உத்திர நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தில் குல தெய்வங்களை வழிபட்டு வந்தால் குலம் சிறந்து குடும்பம் மேம்படும் என்பது  முன்னோர்கள் நம்பிக்கை. இதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குலதெய்வ கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.  

தென்மாவட்டங்களில் குலதெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயிலாகும். வள்ளியூர் அருகே நம்பியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இங்கு மூலஸ்தானத்தில் சபரிமலை ஐயப்பனின் சாயலில் யோக உபநிஷ்ட நிலையில் ஒரு கை தொங்கவிட்டு ஒரு கை அபயஹஸ்தமாகக் காட்டி சாஸ்தா அமர்ந்திருக்கிறார். வலதுப்பக்கம் அவரது படைவீரரான தளவாய்மாடசுவாமி சன்னதியும், இடதுபுறம் பேச்சியம்மன் மருதாணி மரத்தடியில் அருள்பாலிகிறார். கோயிலை சுற்றி கிராம தெய்வங்களான வீரமணி, வன்னி மாடன் கோயில் உள்ளது. இக்கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 13ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, 9ம் திருவிழாவான நேற்று சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். பின்பு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தொடர்ந்து வில்லவனம்புதூர், கண்ணநல்லூர், தங்கயம், இலங்குளம், தலைவர்மார் சமுதாயத்தின் சார்பில் குதிரை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.

சாஸ்தா கோயிலில் தேரோட்டம் நடப்பது. சித்தூர் தென்கரை மகாராஜேசுவரர் கோயிலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருவிழாவில் தமிழகத்தின் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், பிராஞ்சேரி கரையடி மாடசுவாமி மற்றும் வீரிய பெருமாள் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி சுவாமிக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் விழா தொடங்கியது. இதைதொடர்ந்து நேற்று காலை கணபதி ஹோமம், பால்குட ஊர்வலம், கும்பாபிஷேகம், இரவு அலங்கார தீபாராதனையும் பக்தர்கள் பொங்கலிட்டு கிடா வெட்டு வைபவமும் நடந்தது.

இதுபோல் வீரவநல்லூர் கல்லிடை சாஸ்தா கோயில் வனமூர்த்தி அய்யனாருக்கும் பரிவார தேவதைகளுக்கும் காலையில் சிறப்பு வழிபாடும் இரவு பங்குனி உத்திர சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பொங்கலிடும் வைபவம் நடந்தது. சீவலப்பேரி சூலுடையார் சாஸ்தா, கீழபிள்ளையார்குளம் திருமேனி அய்யனார் சாஸ்தா, அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் மெய்யப்ப சாஸ்தா கருஞ்சுடையார், மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா, கோபாலசமுத்திரம் பசுங்கிளி அய்யன் சாஸ்தா, மருகால்குறிச்சி சாஸ்தா, தாழையூத்து பாலுடையார் சாஸ்தா, சேரன்மகாதேவி செங்கோடி சாஸ்தா, சிதம்பர சாஸ்தா, ஆழ்வார்குறிச்சி காக்கும்பெருமாள், சுடலை கோயில், காளத்திமடம் ஆண்டிபட்டி ஆனைமலை சாஸ்தா கோயில், மடவார் வளாகம் களக்கோட்டி சாஸ்தா, நாங்குநேரி அருகே சிறுமளஞ்சி பெருவேம்புடையார் சாஸ்தா, களக்காடு பெருவுடையார் சாஸ்தா கோயில், கரந்தானரி பூலுடையார் சாஸ்தா கோயில் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் பாடகலிங்கசாமி சாஸ்தா, சங்கரன்கோவில் அய்யனார் கோயில், முக்கூடல் அரியநாயகிபுரம் சாஸ்தா, ஆலங்குளம் அருகேயுள்ள ஆண்டிபட்டி ஆணைமலை சாஸ்தா உள்ளிட்ட சாஸ்தா கோயில்கள் மற்றும் கீழப்பாவூர் வெள்ளக்கால் காந்தாரி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல ஹோமங்கள் நடந்தது. நம்பி கோயிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மும்பை அன்னதான அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்றிரவு வன்னியராஜா வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ், இன்ஸ்பெகடர்கள் ரகுராஜ், பட்டாணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர்கள் (பொறுப்பு) ராமசுப்பிரமணியன், விஸ்வநாத் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா, சிவகளை சேரந்தையர் சாஸ்தா, செய்துங்கநல்லூர் அருகே ஆழிக்குடி குருந்துடையார் சாஸ்தா, ஆதிச்சநல்லூர் பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா, ஏரல் அருகே பச்சை பெருமாள் அய்யனார் சாஸ்தா, சேதுக்குவாய்த்தான் சூலுடையார் சாஸ்தா, பெரும்படை சாஸ்தா, சிவகளை சேரந்தையர் சாஸ்தா, திருச்செந்தூர் மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார், குரும்பூர் அருகே தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் சாஸ்தா, சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை மருதமலை சாஸ்தா கோயில் உள்ளிட்ட கோயில்களில் பங்குனி உத்திர விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Related Stories: