புளியங்குடி சிந்தாமணியில் அருள்பாலிக்கும் சொக்கலிங்க பெருமான் சுவாமி கோயில்

நெல்லை மாவட்டம், புளியங்குடி சிந்தாமணியில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை போன்ற அமைப்புடைய சொக்கலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து பூலியன் என்ற மன்னன் புளியமரங்கள் அடர்ந்து வளர்ந்த பகுதிக்கு வேடைக்கு வந்தான். வேட்டை முடிந்ததும் புளியமரங்களை அழித்து புளியங்குடி என்ற நகரை உருவாக்கி அங்கு ஒரு முருகன் கோயிலை கட்டி வழிபாடு செய்து வந்தான். இந்நிலையில் பாண்டிய மன்னன் நாள் தோறும் சொக்கலிங்க பெருமானை வழிபட ஆசை மிகக் கொண்டு கவலைப்பட்டிருந்தான்.

Advertising
Advertising

அப்போது பாண்டிய மன்னன் கனவில் தோன்றிய எம்பெருமான், பூலியன்குடிக்கு கிழக்கே சிந்தாமணி என்ற ஊரை அமைத்து அங்கு சொக்கநாதர் மீனாட்சி அம்மன் கோயிலையும் கட்டி நாள்தோறும் வழிபடும்படி கட்டளையிட்டார். அதன்பின் பூலிய மன்னன் இவ்வூரையும், சொக்கலிங்க சுவாமி கோயிலையும் அமைத்தான். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்று சிறிய அமைப்பு கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. அம்மன் சன்னதிக்கு எதிரே பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் போன்றவையும் இங்கு அமைந்துள்ளது. மூலவர் சொக்கலிங்க சுவாமி 4 அடி உயரத்திலும், அம்பாள் மீனாட்சியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வில்வ தீர்த்தம்,  தலவிருட்சமாக வில்வ மரமும், காமிக ஆகமப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது.

தினமும் காலை 7 மணி காலசந்தி, 11 மணி உச்சிக்காலம், மாலை 6 மணி சாயரட்சை, இரவு 8 மணி அர்த்தசாம பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும். இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருவாதிரை, மகா சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. ராஜபாளையம்  தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடி அருகே சிந்தாமணியில் இக்கோயில் அமைந்துள்ளது. தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து பஸ்வசதி உள்ளது. சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து 16 கிமீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

Related Stories: