ரசிகரை கொலை செய்த விவகாரம்; தர்ஷனுக்கு ரம்யா எதிர்ப்பு, சஞ்சனா ஆதரவு

பெங்களூரு: கன்னட முன்னணி நடிகைகளில் ஒருவரும், அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா, ரசிகர் ஒருவரை படுகொலை செய்த கன்னட நடிகர் தர்ஷனின் செயலை வன்மையாக கண்டித்துள்ளார். தனது காதலியும், நடிகையுமான பவித்ரா கவுடாவை ஆன்லைனில் மிரட்டி தொந்தரவு செய்ததாக கூறி, ரேணுகா சுவாமி என்ற தனது ரசிகரை பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ஆள் வைத்து அடித்து கொன்ற சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட சிலரை போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ரம்யா கூறுகையில், ‘அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். சட்டத்தை எல்லோரும் கையில் எடுப்பது ஆபத்தானது. மக்கள் மீது வன்முறை நடத்துவது, கொலைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எந்தவொரு பிரச்னைக்கும் முறையாக வழக்குப்பதிவு செய்து, சட்ட ரீதியாக எதையும் அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய வகையில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறைக்கு வாழ்த்துகள். அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு ஆட்படாமல், மக்கள் சட்டத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை அரசும், நீதித்துறையும் காப்பாற்றும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் நீதித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

தனது எக்ஸ் தளத்தில் தர்ஷன் கைது செய்யப்பட்ட செய்தியைப் பகிர்ந்த ரம்யா, `எஸ்.கிரிஷ், ஏசிபி சந்தன் குமார் உள்பட அவர்களது குழுவினர் அச்சமின்றி விசாரணை செய்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்திருப்பது பாராட்டுக்குரியது. சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். சஞ்சனா கல்ராணி கூறும்போது, ‘தர்ஷன் நல்லவர். அவர் எனது நண்பர். அவர் கைது செய்யப்பட்டது கன்னட சினிமாவுக்கு கறுப்பு நாள்’ என்றார்.

The post ரசிகரை கொலை செய்த விவகாரம்; தர்ஷனுக்கு ரம்யா எதிர்ப்பு, சஞ்சனா ஆதரவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: