கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இரு தங்கத்தேர் பவனி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழாவின் 10ம் நாளான நேற்று (16ம் தேதி) இரு தங்கத்தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 9ம் நாளான நேற்றுமுன்தினம் (15ம் தேதி) சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பழைய ஆலயத்தில் திருப்பலி, காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு நோயாளர்களுக்கான திருப்பலி ஆகியவற்றிற்கு வாவத்துறை பங்கு தந்தை ஜாண்ஜோர் கென்சன் தலைமை வகித்து மறையுரையாற்றினார்.

மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இதில் கன்னியாகுமரி முன்னாள் பங்குத்தந்தை லியோன்.எஸ்.கென்சன் தலைமை வகித்து மறையுரையாற்றினார். இரவு 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்க தேர்ப்பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் 10ம் நாளான நேற்று (16ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை இரு தங்கத்தேர் பவனி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடந்த தங்கத்தேர் திருப்பலியில் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை வகித்து மறையுரையாற்றினார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி மறை மாவட்ட குருகுல முதல்வர் கிலாரியூஸ் தலைமையில் நடந்தது.

தொடர்ந்து காலை 8 மணிக்கு நடந்த ஆங்கில திருப்பலிக்கு காசா கிளாரட் சபை செல்வமணி தலைமை வகித்தார். காசா கிளாரட் சபை ராயப்பன் மறையுரை ஆற்றினார். காலை 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு நடந்த மலையாள திருப்பலிக்கு கலாசன்ஸ் பள்ளி அதிபர் சுனில் தலைமை வகித்தார். கலாசன்ஸ் பள்ளி முதல்வர் ஸ்டாலின் மறையுரையாற்றினார்.

பகல் 12 மணிக்கு தமிழில் நடந்த திருப்பலிக்கு ராஜாவூர் பங்கு தந்தை மதன் தலைமை வகித்தார். மாலை 6 மணிக்கு கொடியிறக்குதல் நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்குமக்கள், பங்கு தந்தை ஜோசப் ரொமால்டு, இணை பங்கு தந்தையர் சகாய ஸ்டாலின், டோனி ஜெரோம், வில்பர்ட் மற்றும் பங்குபேரவை துணை தலைவர் நாஞ்சில் ஏ.மைக்கேல், செயலர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் பெனி, இணைச் செயலர் தினகரன், அருள்சகோதரிகள், பங்கு அருள் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: