மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பாடல் பட்டுப் புடவை அணிந்து காட்சியளித்தார் ஆண்டாள்

திருவில்லிபுத்தூர்: மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, ஆண்டாள் கோயிலில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில், திருப்பாவை பாடல் அச்சிட்ட பட்டுப்புடவை அணிந்து ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி, கோயிலில் உள்ள வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில், ரூ.2 லட்சம் மதிப்பிலான திருப்பாவை பாடல்கள் அச்சிடப்பட்ட பட்டுப்புடவையை அணிந்து ஆண்டாள், ரெங்கமன்னாரோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த சிறப்பு பூஜையில் ஜகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஆதிகேசவலு, தக்கார் ரவிச்சந்திரன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரி சம்பத்குமார், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் செய்திருந்தனர். நகர் இன்ஸ்பெக்டர் பவுல் யேசுதாஸ் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோயில் அர்ச்சகர் ஒருவர் கூறுகையில், ‘‘மார்கழி மாதப் பிறப்பையொட்டி, இன்று (நேற்று) அதிகாலையில், அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆனால், ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதம் எந்த நேரத்தில் பிறக்கிறதோ, அந்த நேரத்தில்தான் சிறப்பு பூஜை நடைபெறும். இதனடிப்படையில், மார்கழி மாதம் பிற்பகல் 2.30 மணிக்கு பிறந்தது. இதனால், அந்த நேரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது,’’ என்றார்.

Related Stories: