மாதங்களில் சிறந்தது மார்கழி

மார்கழி மாதத்தில் மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரங்களில் முழு நிலவு (பௌர்ணமி) சஞ்சரிக்கும். அதுவே மார்கசீரிஷம் என்றாகி, மார்கழியானது.

ஆண்டாள் மார்கழி மாதத்தில்தான் பாவை நோன்பைக் கடைப்பிடித்து, காத்யாயனி தேவியை வழிபட்டு, திருவரங்கனை கரம் பிடித்தாள்.

திரு எனும் அடைமொழியை பெற்ற நட்சத்திரங்கள் திருவோணம், திருவாதிரை. இதில் திருவோண நாயகனாம் திருமாலுக்கு வரும் வைகுண்ட ஏகாதசி விழாவும் திருவாதிரை நாயகனாம் சிவபெருமானுக்கு வரும் ஆருத்ரா தரிசனமும் இம்மாதத்தில் பிரசித்தி பெற்றவை.

கிருஷ்ண பரமாத்மா, ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ எனக் கூறி இம்மாதத்தை பெருமைப்படுத்தியுள்ளார்.

நூற்றியெட்டு திவ்யதேசங்களுள் ஒன்றான கும்பகோணம் சார்ங்கபாணி ஆலயத்தில் உத்திராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை தட்சிணாயன வாசல் வழியேவும் ஆடி முதல் மார்கழி வரை உத்திராயண வாசல் வழியேவும் சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும்.

கோவர்த்தனகிரியைத் தூக்கி கோவிந்தன் எனும் பட்டப்பெயரை கிருஷ்ண பரமாத்மா பெற்றது மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்றுதான்.

மார்கழி மாதத்தில் பெண்கள் வண்ணக் கோலங்களின் நடுவே பசுஞ்சாணியினால் பிள்ளையார் பிடித்து வைத்து ஆரம்பிப்பர். மார்கழி மாதம் ஹனுமத் ஜெயந்தியோடு முடிவடையும். இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பர்.

மார்கழி மாத விடியற்காலையில் வீசும் காற்றில் நம் உடல் நலத்திற்கு நன்மை தரும் சக்திகள் உள்ளன. சூரிய ஒளியில் அந்த சக்திகள் மறைந்து விடும் என்பதால் மார்கழி மாத விடியற்காலையில் கோலம் போடுவது, பஜனை பாடிச் செல்வதை பெரியவர்கள் மரபாக்கினர். அந்த அதிகாலைக் காற்றிலுள்ள சக்திகள் வாத, பித்த ரோகங்களை சரி செய்யும்.

அந்நாளில் திருமணத்திற்காகக் காத்திருக்கும் கன்னிப்பெண்கள் உள்ள வீட்டினர் மட்டுமே கோலத்தின் நடுவே பூசணிப்பூ வைப்பர். அதைக் கொண்டு அந்த வீட்டில் திருமண வயதில் பெண் இருப்பதை அறிந்து தை மாதம் பெண் பார்த்து திருமணத்தை நிச்சயிப்பர்.

மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முகூர்த்த நேரமாக கொண்டாடப்படுவதால் அந்த மாதத்தில் செய்யும் தெய்வ வழிபாடுகள் மிகுந்த நன்மைகளைத் தரும். இப்படி தெய்வ வழிபாடுகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாதென்பதற்காகத்தான் மார்கழியில் குடும்ப சுப விசேஷங்களை நடத்துவதில்லை.

ரமண மகரிஷி,விவேகானந்தர், தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகிய மகான்களின் அவதாரம் இந்த மார்கழி மாதத்தில்தான் நிகழ்ந்தது.

ராமநாமத்தையே தாரக மந்திரமாய் ஜபித்து அந்த ராமனிடமே கலந்த திருவையாறு தியாகபிரம்மத்தின் ஆராதனை நடப்பதும் இந்த மாதத்தில்தான்.

ஆலயங்களில் மார்கழி மாத விடியற்காலையில் தரப்படும் வெண்பொங்கலில் உள்ள இஞ்சி, மிளகு போன்றவை குளிரினால் வரும் நோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.

மானக்கஞ்சாறர், சாக்கியர், வாயிலார், சடையனார், இயற்பகையார் போன்ற நாயன்மார்கள் ஈசனுடன் இரண்டறக் கலந்ததும் இந்த மார்கழியில்தான்.

வைணவ ஆலயங்களில் பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள் நடப்பதும் பெருமாள் மோகினித் திருக்கோலம் கொள்வதும் மூலமூர்த்திகள் தைலக்காப்பில் அருள்வதும் இந்த மாதத்தில்தான்.

இம்மாதம் பீடுடைய மாதம். அதாவது மிடுக்கான தெய்வ வழிபாட்டிற்கான மாதம். இது புரியாமல் மார்கழியை பீடை மாதம் என்று கூறுவது தவறு.

இம்மாதத்தில்தான் ஹேமந்த ருது தொடங்குகிறது. எங்கும் பரங்கி, செவ்வந்தி, மஞ்சள் என மஞ்சள் வண்ணமாக காட்சி தருவதால் இம்மாதம் பீத மாதம் என்றும் அழைக்கப்படும். பீதம் என்றால் மஞ்சள் என்று பொருள்.

இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் என்றும் பதினாறு மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய இம்மாதம் சிறந்தாகக் கருதப்படுகிறது.

இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமத் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

வைகுண்ட ஏகாதசி அன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்று கருதப்படுகிறது.

ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாயனி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று.

ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள். ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவைநோன்பினை மேற்கொண்டாள். எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.

திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் பாவை நோன்பினை மேற்கொள்கின்றனர்.

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும். இந்நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர். இவ்விரதத்தின்போது ஒரு வேளை அவித்த உணவினை மட்டுமே உண்பர். இவ்விரதத்தினை பெரும்பாலும் கன்னிப்பெண்கள் கடைப்பிடிப்பர். இவ்விரதத்தின்போது திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. இவ்வழிபாட்டில் பிட்டு படைக்கப்படுகிறது. இதனால் இவ்வழிபாடு பிட்டு வழிபாடு என்று அழைக்கப்படுகிறது.

மார்கழி மாதத்தின் மூலநட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனும ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

அனுமத் ஜெயந்தி அன்று விரதம் மேற்கொண்டு மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அருளுமாறு பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. அனுமனிற்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இத்தினத்தில் விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட சகல சௌபாக்கியங்கள் கிடைக்கும். பகையை வெல்ல உதவும்.

இம்மாதத்தில் 63 நாயன்மார்களில் வாயிலார் நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகிறது.

பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

ரமண மகரிஷி, அன்னை சாரதா தேவியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில் தோன்றியோர் ஆவர்.

Related Stories: