மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் சிறப்பு பூஜை

வத்திராயிருப்பு: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதனையொட்டி தாணிப்பாறை வனத்துறை கேட் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அன்று முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர்.

தாணிப்பாறை வனத்துறை கேட்டில், பக்தர்களின் உடமைகளை வனத்துறை ஊழியர்கள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு மலைக்கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி ஆகியோருக்கு நேற்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் மொட்டையடித்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியன் செய்திருந்தார்.

பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசாமல் இருக்க, கட்டண லேபிள் முறையை வனத்துறை நடைமுறைப்படுத்தியது. இதன்மூலம், பிளாஸ்டிக் பாட்டிலுக்கு லேபிள் ஒட்டி, ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். பக்தர்கள் கோயிலுக்குச் சென்று திரும்பி வரும்போது, பாட்டிலை காண்பித்து ரூ.10ஐ திரும்ப பெறலாம். இதனால், பக்தர்கள் காலி பாட்டில்களை வனப்பகுதியில் வீசாமல் திரும்ப கொண்டு வந்து ரூ.10 வாங்கிச் சென்றனர்.

Related Stories: