மந்திர வடிவாகத் திகழும் உமையம்மை

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 32

சாஸ்திரங்கள் அழகு என்ற வார்த்தைக்கு இறைவனின் மூன்று சிறப்பான குணங்களில் ஒன்று என்று குறிப்பிடுகின்றார். நிலைப்பேறு (அழியாத்தன்மை), சிவம் (விலகாத நன்மை), சுதந்திரம் (தன்னிச்சையாய் செயல்படத் தகுதி  வாய்ந்தது) இதையே வேதம் சத்யம், சிவம், சுந்தரம் என்கிறது. சுந்தரம் என்பது வடமொழியை பொறுத்தவரை அழகான, விருப்பமான, மனதை கவருகிற தன்மையை குறிப்பிடுவதாகும். இறைவனுக்கு இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த தன்மையை  ‘சுந்தரி’ (பாடல் எண் - 8) என்ற வார்த்தையால் அறியலாம். அனைத்து உயிர்களுக்கும் பிரியமானவளும், அழகானவளும், மனதைக் கவருகிறவளும் ஆகின்ற உமையம்மை மூன்று பெயர்களுடன்,

சுந்தரி - பார்வதி

விருப்பமானவள் - பிரிதர்ஷினி - இலக்குமி,

மனதை கவருபவள் - மனோஹரி - சரஸ்வதி என்ற மூன்று தேவிகளையும் அழகே என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். திருக்கடையூரில் காலசம்ஹார மூர்த்தியின் உடனுறை சக்தியான பாலாம்பிகை திருமேனியின் இரண்டு பக்கத்திலும் இலக்குமி, சரஸ்வதியோடு இருப்பதை இன்றும் காணலாம். இந்த உமையம்மையையே அணியும் அணிக்கழகே என்று குறிப்பிடுகின்றார். பிரம்மாவின் நாவிற்கு அணியாக இருக்கும் சரஸ்வதி, விஷ்ணுவின் மார்பிற்கு அணியாக இருக்கும் இலக்குமி, சிவபெருமானின் உடல் பாதிக்கு அணி செய்யும் உமையம்மை. இந்த மூன்று  திருவுருவங்களையும் அணியும் அணிக்கழகே என்று குறிப்பிட்டார். இதையே சாக்த தந்திரங்கள் அழகு என்று பொருள்படும்படி கூறுகிறது.

‘சுந்தரி’ (பாடல் எண் - 8) ‘சிவகாம

சுந்தரி’ - (பாடல் எண் - 68)

‘திரிபுர சுந்தரி’ - (பாடல் எண் - 2)

என்று குறிப்பிடுவதிலிருந்து அணியும் அணிக்கழகே என்ற வார்த்தையால் அணியாயும் அணிக்கழகாயும், திகழ்வது உமையம்மையே என்கிறார். ‘‘அணுகாதவர்க்குப் பிணியே’’: இச்சொல்லுக்கு பொருள் காணுமுன் ஆன்மாவின் இயல்பை சற்று அறிந்தபிறகு பொருள் காண முயன்றால் தெளிவுற அமையும். அப்படியில்லாவிட்டால் இறைவிக்கு விருப்பு வெறுப்புக்கள் உண்டு என்ற பொருள், குற்றம் தோன்றாமை அணுகியவருக்கு அருள்பவள். அப்படி அணுகாவிட்டால் பிணியைத் தருபவள் என்றல்லவா ஆகிவிடும். ஆன்மாக்கள் இயல்பாகவே அறிவை மறைக்கும் ஆணவ மலத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

அறிவு மறைவதால் தன்னைப்பற்றியோ தனக்கு புறத்தேயுள்ள உலகத்தைப்பற்றியோ, தனக்குள்ளேயுள்ள இறைவனைப்பற்றியோ அறிய இயலாததாகி நல்லது எது? தீயது எது என்று விளக்கி தெளிவுற அறிய முடியாததாய் தன் முயற்சியால் தவறான அறிவைப் பெற்று துன்புறும் இயல்பை உடையதாக இருக்கிறது.

ஆன்மாக்கள் அவ்வாறு இருப்பதால் பிணி, மூப்பு, சாக்காடு, பிறப்பு, வறுமை இவற்றால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகும். இவைகளை பிறவிப் பிணி என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுவது பிறவிப் பிணியாகிற பசி, தாகம், மலம், தூக்கம், வறுமை, அடையாளமின்மை (மாறிக்கொண்டே இருத்தல்) அழிவது, நான் என்னும் எண்ணம், வளமின்மை, தன்நிறைவின்மை, அனைத்து வகையிலும் துன்புறுதல், உயர்வின்மை, தனக்கென்று உடைமை பொருளின்மை, தன்னிச்சையாய் இயங்கும் தன்மையின்மை என்ற பிணியைக் கொண்டதாகத் திகழ்கிறது.

க்ஷுத் பிபாஸா மலாஞ் ஜ்யேஷ்ட்டா - மலக்ஷ்மீம்

நாசயாம்யஹம்! அபூதிம் அபம்ருத்யுஞ்ச ஸர்வாந்நிர்

ணுதமே க்ருஹாத் - என்கிறது ஸ்ரீஸுக்தம்.

இவைகளைக் கொண்டு ஆன்மாக்கள் இயல்பாகவே பிணியை உடையனவாகத் திகழ்கிறது. இறைவியின் அருளானது அப்பிணியைப் போக்குவதற்கு முயற்சி செய்கிறது. பொதுவாக மருத்துவரிடத்தில் பிணியாளர்கள் சென்று பிணியை போக்கிக் கொள்ள முயன்றாலும் மருத்துவர் சொல்படி மருந்துண்ணல், தேவையற்றதை விலக்கல் என்று  மருத்துவர் சொல்படி செய்யவில்லையென்றால் நோயானது அழியாமல் வலுப்பெற்று நோயாளியைத் துன்புறுத்தும். அப்படி நோயாளி துன்புறுவதற்குக் காரணம் மருத்துவர் சொல்படி கேளாமையாகும்.

பிணிக்கு மருத்துவர் காரணமல்ல; அதுபோல இறைவியை வணங்கி அவளருளை பெற்றுக் கொண்டால் அனைத்துப் பிணியும் விலகி ஓடும். அதே சமயத்தில் உமையம்மையை அணுகி வணங்காது இறையருளை பெறாதார்க்கு இயல்பாகவே உள்ள பிறவிப்பிணி வளர்ந்து துன்புறுத்தும். இதையே, ‘பவரோக வைத்திய நாதன்’ என்று ஆகமமும், ‘பிஷஜோ’ (வைத்தியம்) என்று வேதம் குறிப்பிடுவதிலிருந்து சிறப்பாக அறியலாம். அந்த வகையில் அபிராமி பட்டர் உமையம்மையை ‘அணுகுவதற்கு பிணியே’ என்று கூறுவதிலிருந்து அறியலாம். இதையே லலிதா ஸஹஸ்ரநாமம் ‘நிரா மயா’ வியாதியை நீக்குபவள் (தானே ஆரோக்கிய வடிவானவள்) என்று பொருள்படும் நாமாவளியிலிருந்தும் அறியலாம். உமையம்மையை வழிபடுகின்ற திருக்கடையூரின் வழிபாட்டு நூலானது சர்வரோக நிவாரணி என்றே அழைக்கப்படுகிறது. இதிலிருந்தும் ‘அணுகாதவருக்குப் பிணியே’ என்று கூறுகின்றார்.

‘‘பிணிக்கு மருந்தே’’:

பிணி என்றால் என்ன? மருந்தென்றால் என்ன? பிணிக்கு மருந்தென்றால் என்ன? என்பதை முதலில் அறிவது இச்சொல்லுக்கு விளக்கம் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும். மேலும், முதல் காரணம், நிமித்த காரணம், மகா காரணம் என்று மூவகை காரணம் அறிந்தால்தான் இச்சொல்லிற்கு தெளிவுற விளக்கம் பெற முடியும்.

உடலின் இயல்புத்தன்மை மாறுவதால் ஆன்மாவிற்கு ஏற்படும் ஒரு துன்ப அனுபவமாகும்.

உடலோடிருக்கின்ற ஆன்மா அனைத்திற்கும் ஐவகை பிணி உள்ளது.

1. உடல் சார்ந்தது. ஜுரம்.

2. உள்ளம் சார்ந்தது - பைத்தியம் முதலானது.

3. அறிவு சார்ந்தது - ஐயம் திரிபு  முதலானவை.

4. ஆன்மா சார்ந்தது - பிறப்பு முதலானது

5. எண்ணம் சார்ந்தது - மறதி.

இந்த ஐந்துமே பிணி எனப்படுகின்றது. மருந்து என்பது ஒரு உடலின் இயல்புத் தன்மை மாற்றத்தைச் சரிசெய்வதன் மூலம் ஆன்மாவிற்கு ஏற்பட்டிருக்கின்ற துன்பத்தை விலக்குவது. உடலாகின்ற ஆன்மா அனைத்திற்கும் ஐவகை மருந்துள்ளது. உடல் சார்ந்து - ஆரோக்கியம், உள்ளம் சார்ந்து - அமைதி, அறிவு சார்ந்து - தெளிவு, ஆன்மா சார்ந்து - பிறவாமை, எண்ணம் சார்ந்து - நினைவு. இந்த ஐந்துமே மருந்தெனப்படுகின்றது. ‘‘பிணிக்கு மருந்தென்றால் ஒவ்வொரு நோய்க்கும் அதன் எதிர்விளைவே மருந்து எனப்படுகிறது. எந்த நோய்க்கு எந்த மருந்து என்பது நோய் சார்ந்து, அதை நீக்கும் மருத்துவரால் முடிவு செய்யப்பட்டு நோய் நீக்கத்திற்கு உதவும் தன்மை கொண்டது.

உமையம்மையானவள் பிணிக்கு முதல் காரணமாகவும், மருந்திற்கு நிமித்த காரணமாகவும், பிணிக்கு மருந்து என்பதற்கு மகாகாரணமாகவும் திகழ்வதால் உமையம்மையை இந்த சொல்லால் குறிப்பிட்டார். உதாரணமாய் பிணிக்கு முதல் காரணம் என்பது உடல். உடல் இருந்தால்தான் பிணி வரும். உடலைப் படைத்ததனால் பிணிக்கு முதல் காரணமாகின்றாள் உமையம்மை. இதையே அபிராமி பட்டர் ‘பூத்தவளே’ - 13 என்கிறார்.

பிணிக்கு நிமித்த காரணம் - உமையம்மை நோய் இருந்தால்தான் அதற்கு மருந்து என்று ஒன்று இருக்க முடியும். ஆன்மாவை உடலோடு இணைப்பதால் ஆன்மா, உடல் இவை இரண்டும் ஒன்றாகச் சேருகிறபோது இயல்புத்தன்மை மாறி உடலோடு கூடிய ஆன்மா பிணியுள்ளதாகிறது. பிணிக்கு மருந்து (மகா காரணம்) ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வினைப் பயன் வழி உடலோடு இணைவதால் அந்தந்த வினைக்குத் தக்கவாறு உடலோடு இணைந்திருக்கும் உயிர் தன்மையானது இயல்பு மாற்றம் சார்ந்து நோயின் தன்மை அமைகிறது.

நோயை நீக்குவதற்கு வைத்தியரும் மருந்தும்போல உமையம்மை வைத்தியராகவும் அவளது அருள் மருந்தாகவும் இருந்து ஆன்மாக்களோடு இயைந்த உடலுக்கு பிணி நீக்கம் செய்வதையே ‘பிணிக்கு மருந்து’ என்கிறார். உதாரணம் உடலில் உள்ள சூட்டைப் போக்க எண்ணெயை முதலில் தேய்த்து அதைப்போக்க பின் சீயக்காய்த்தூள் சேர்த்து குளித்தபின் உடலின் சூடானது எப்படி உடலை விட்டு நீங்குகிறதோ... அதுபோல ஆன்மாவை உடலோடு சேர்ப்பதனாலும் பின் அதைப் பிரிப்பதனாலும் ஞானத்தை அடையச் செய்கின்ற செயலே தெய்வம் செய்வதாகும். அதைத்தான் முதலில் ‘பிணியே’ என்று குறிப்பிட்டவர் பிறகு ‘பிணிக்கு மருந்தே’ என்று குறிப்பிட்டார்.

ஆன்மா உடலோடு சேருவதைப் பிணி என்றும் உடலை விட்டுப் பிரிப்பதை மருந்தென்றும், சேர்த்துப் பிரிக்கின்ற செயலை ‘பிணிக்கு மருந்தே’ என்றும் குறிப்பிடுகின்றார். ஆன்மா உடலோடு சேர்வது பிறப்பு எனும் பிணி. ஆன்மா உடலை விட்டுப் பிரிவது மரணம் எனும் மருந்து. சேர்ந்து பிரிப்பதனால் ஆன்மாவிற்கு ஏற்படுவது பிறவி நோய் மருந்தாகிற ஞானம். இதையே பிணிக்கு மருந்தே என்ற வார்த்தையால் குறிப்பிடுவதன் மூலம் உமையம்மையே நோயாகவும், நோய்க்கு மருந்தாகவும், அதைத்தரும் மருத்துவராகவும் இருக்கிறாள் என்பதை நமக்கு சுட்டுகிறார்.

‘‘அமரர் பெரு விருந்தே’’:

அமரர் என்ற வார்த்தை வடமொழிச்சொல்லாகும். மிருங்கு பிராணத்தியாயே என்ற வினையடியிலிருந்து பிராணன் என்ற மூச்சை விட்டு விடுதல் (மரணமடைதல்) என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகின்ற பொருளாகும். அதன்முன் ‘அ’ என்ற முன்னொட்டு சேர்ப்பதனால் இறவாமை என்று பொருள்படும். இறவாமையையுடைய உடல் நீத்த உயிர் அடையும் தன் உணர்வையே அமர என்ற வார்த்தையின் மூலமாக குறிப்பிட்டார்.

‘பெரு விருந்தே’ என்ற வார்த்தையால் தேவர்களின் (இறவாதவர்கள்) உணவை, அமுதத்தை குறிப்பிடுகின்றார். அமுதம் என்பது பிணி, மூப்பு, இறப்பு, சலிப்பு இவைகள் இல்லாது மகிழ்ச்சிஎன்கின்ற குணங்களை சுட்டுகிற ஒரு சிறப்பு சொல்லாகும். ‘அமரர் பெரு விருந்தே’ என்பது தேவர்கள் அருந்தும் அமுத வடிவாக உமையம்மை இருக்கிறாள் என்பதையே நமக்கு காட்டுகிறார். இதையே லலிதா ஸஹஸ்ர நாமம் ‘பானுமண்டல மத்யஸ்தா’ சந்திரன் நடுவில் அமுதமாகயிருப்பவள் என்று பொருள்பட கூறுவதிலிருந்து அறியலாம்.

திருக்கடையூர் தலபுராணமானது தேவர்கள் கடைந்த அமுதத்தை ஒரு குடத்தில் வைத்துவிட்டு, அமுதத்தை அருந்தும் முன் குளிக்கச் சென்றனர். இடைப்பட்ட நேரத்தில் யாரும் அறியா வண்ணம் தோன்றிய கள்ளவாரண கணபதியால் அமுதம் நிறைந்த குடமானது சிவனாகவே எண்ணி வழிபடப்பட்டு சிவலிங்கமாகவே மாறிவிட்டது. அதில் குடம் சிவமானதால் கடேஸ்வரர் எனப்பட்டார். அமிர்தமாய் உமையம்மையே இருந்ததால் உமையம்மையானவள் அமிர்தா எனப்பட்டாள். உமையம்மையும், சிவனும் இணைந்த வடிவமே அமிர்தகடேஸ்வரர் எனப்பட்டதாகும். பொதுவாக உமையம்மை சந்நதியில்தான் பள்ளியறை அமைக்கும் பழக்கம் உள்ளது. மாறாக, திருக்கடையூரில் அபிராமி ஆலயம் தனியாக இருந்தபோதும் அங்கு பள்ளியறை இல்லாமல் சிவன் சந்நதியில் அமைந்திருப்பதைக் கொண்டு அமிர்தமாகிற அபிராமியும், குடமாகிற சிவனும் அமிர்தகடேஸ்வரர் என்ற ஒரே பெயரிலேயே சிவசக்தியாக எழுந்தருளியுள்ளதை சுட்டவே ‘அமரர் பெரு விருந்தே’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டார்.

‘பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம்  பணிந்த பின்னே’’:

சாஸ்திரமானது வணங்கும் பக்தர்களை நான்கு விதமாக குறிப்பிடுகிறது. அவர்களின் வளர்ச்சி நிலை, வணங்குவதால் ஏற்படும் மனப் பக்குவம் சார்ந்து இரண்டாகப் பிரிக்கிறார். எல்லா தெய்வத்தையும் வணங்குவது, ஒரே தெய்வத்தை வணங்குவது. இதை வடமொழியானது அநேகாத்ம தரிசனம், ஏகாத்ம தரிசனம் என்ற சொற்களால் விளக்குவது, உபாசகனானவன் வழிபடும் தெய்வத்தைத் தவிர அதனோடு சார்ந்த பிற தெய்வத்தையும் வழிபடுவதென்பது அனேகாத்ம சாதனம் என்றும், ஒரு கடவுளைத் தவிர மனதாலும் வேறு எந்த கடவுளையும் வணங்கும் விருப்பமற்ற நிலை இது முதன்மை நிலையாகும். அபிராமி பட்டர் அபிராமியைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்கவில்லை.

இந்த வார்த்தையால் அவரின் பக்குவத்தையே இங்கே குறிப்பிடுகின்றார். இந்த பக்குவத்தை நமக்கு பாடலின் வரிகளின் மூலம் கூறுகின்றார் என்றால் இந்த பாடலை பார்ப்பவர்கள் அத்தகைய பக்குவத்தை பெற்றால்தான் உமையம்மையின் அருளை பாடல் வரிகளில் குறிப்பிட்டபடி, படிப்போரும் அவளின் அருளைப் பெற முடியும். இது முயற்சியினால் பெற முடியாது. இது உபாசனை மூலமாகவும், ஜெபத்தின் மூலமாகவும், உள்ளுக்குள் (உபாசகன் உள்ளத்தில்) உமையம்மை மந்திர வடிவமாகத் திகழ்ந்து, உபாசகனுக்கு உள்ளத்துள் அந்த பக்குவத்தை உமையம்மை ஏற்படுத்துகின்றாள்.

இது உபாசிப்பவனுக்கு சாதனம் என்ற வழி கூறியதோடு ஒவ்வொரு உபாசனை நிலையில் நின்று பயணிக்கும்போதுதான் செய்வது சரிதானா? உமையம்மையின் அருள் கிட்டவில்லையே? இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்திற்கெல்லாம் இவ்வரியானது அனுபவம் சார்ந்த மிக நுட்பமான விளக்கமளிக்கிறது என்பதை ‘கொள்ளேன் மனதில் (பாடல் எண் - 23) பரம் என்று அடைந்தேன் (பாடல் எண் - 88) நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை (பாடல் எண் - 95) என்ற வார்த்தைகளினாலும் அவரின் உபாசனை வளர்ச்சியை மிகவும் நுட்பமாக பதிவு செய்து சக்தியின் அருளை நமக்கு சாத்தியப்படுத்த முயல்கிறார், அபிராமி பட்டர்.

(தொடரும்)

Related Stories: